‘கூளமாதாரி’ பண்ணையாட்களாக வேலை செய்யும் தலித் சிறுவர்களின் வாழ்வை அவர்களின் பார்வையினூடாக விவரித்துச் செல்கிறது. பதின்பருவத்தினைத் தொட்டுக் கொண்டிருக்கும் அவர்கள் இல்லாமை, அதிகாரம், சுயநலம், தீண்டாமை முதலியவற்றின் பிடிகளுக்கு உட்பட்டும் உயிரியல்பான அன்பு, காதல், காமம் உள்ளிட்டவற்றின் மலர்ச்சிக்கு ஆட்பட்டும் வளர்கின்றனர். சிறுவயதில் அவர்கள் பெறும் அனுபவங்களும் அடையும் வாழ்க்கைப் பார்வையும் மிகவும் உக்கிரமானவை. பனைகள் ஓங்கிய நிலமும் வெற்று வெளியுமே இதன் களங்கள். ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு வித ஓவியமெனத் துலங்கும் நிலவெளியின் காட்சிச் சித்திரம். இயற்கை வெறுமனே வருவதில்லை, வாழ்வின் பின்புலம் அது என்னும் தமிழ் மரபின் நீட்சி. எல்லாச் சந்தர்ப்பத்திலும் ஓராயிரம் கைகளை நீட்டி அரவணைத்துக் காக்கும் இயற்கை உயிர்கொண்டு பாத்திரங்களாக இதில் உருப்பெற்றுள்ளது. மனிதர்களும் ஆடுகளும் இயல்புடன் இதனுள் உலவுகின்றனர். மனித உறவுகளில் பலவித பேதங்கள். அவற்றைவிடவும் மனிதருக்கும் ஆடுகளுக்குமான உறவுகள் அர்த்தம் பொதிந்தவை. இந்நாவலை வாசிப்பது வாழ்வுக்குள் பயணமாகும் அனுபவமாக விளங்குகிறது.
Be the first to rate this book.