திருவிளையாடல் திரைப்படத்தில் வரும் தருமி கதையைப் பார்க்காதவர்கள் மிகச்சொற்பமாகவே இருக்கக்கூடும். இறையனாராக நடிகர் திலகம், நக்கீரராக அப்படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான ஏ.பி. நாகராஜன், தருமியாக நம் பேரன்புக்குரிய நாகேஷ், செண்பகப் பாண்டியனாக நம் அரிய கலைஞன் முத்துராமன் ஆகியோர் தங்களின் தன்னிகரற்ற கலைத்திறமையால் அந்தக்காட்சியைச் செதுக்கி, மெருகேற்றி அதனையொரு நித்திய ஜீவ காவியமாக்கினார்கள். அதில் வரும் வசனங்களை நம்மால் மறக்கத்தான் முடியுமா? இந்தக் கலைஞர்களின் உழைப்புதான் எத்தகையது! வீடுதோறும் நற்றமிழைக் கொண்டுபோய்ச் சேர்த்தார்கள் அல்லவா! இன்று வெளியாகும் பெரும்பாலான திரைப்படங்கள் குடிகாரன் வாந்தி எடுத்தது போல்தான் உள்ளன. போகட்டும்.
சில காலமாக என் மனதிற்குள் இந்தப்பாடலைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தேன். அச்சயமத்தில் நான் வழக்கமாக புத்தகங்கள் வாங்கும் ஒரு வாட்சப் குழுமத்தில் “கொங்குதேர் வாழ்க்கை” எனத்தலைப்பிடப்பட்ட புத்தகத்தைப் பார்த்தேன். நாம் எதைப்பற்றி எண்ணுகிறோமோ அதுதொடர்பான விவரங்களை பிரபஞ்சம் நமக்கு வழங்கும்போலும். உடனே அப்புத்தகத்தை வாங்கினேன். மு.வ எனப்பொதுவாக குறிப்பிடப்படும் தமிழறிஞர் திரு.மு.வரதராசன் அவர்களால் எழுதப்பட்ட புத்தகம். இரண்டாம் பதிப்பு. 1956-ஆம் ஆண்டு வெளிவந்தது. அவர் 1949-ல் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் ஆண்டு விழாவில் ஆற்றிய சொற்பொழிவே இந்நூல்.
மு.வ வின் எழுத்துகளை நான் அதிகம் படித்ததில்லை. என் இளங்கலைப்படிப்பின்போது, பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருந்த “நல்வாழ்வு” எனும் கட்டுரைத்தொகுப்பையும் அவரது புகழ்பெற்ற நூலான “தமிழ் இலக்கிய வரலாறு” நூலையும் மட்டுமே படித்திருக்கிறேன். இந்தப்புத்தகம், ஏன் மு.வவை இவ்வளவு நாட்கள் படிக்கவில்லை என்ற ஆதங்கத்தை என்னுள் ஏற்படுத்தியது.
குறுந்தொகையில் இறையனார் என்ற புலவர் எழுதிய ஒரே ஒரு சங்கப்பாடல் மட்டுமே நமக்குக் கிடைத்திருக்கிறது. ஆனால் அது அதிகமுறை அறிஞர்களால் விவாதிக்கப்பட்ட பாடல். திருவிளையாடல் திரைப்படத்தில் மூலமாக தமிழ் இல்லங்களை வந்தடைந்த பாடல்.
“கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே”
இந்த ஒரு பாடலை மட்டும் 73 பக்கங்களில் விவரித்திருக்கிறார் மு.வ. ஆராய்ச்சி என்றால் இதல்லவா ஆராய்ச்சி என்று தோன்றியது. ஒரே ஒரு சங்கப்பாடலைப்பற்றிய இத்தனை செறிவானதோர் தர்க்கவியல் சார்ந்த ஆராய்ச்சி நூலைப்படித்தது ஒரு சிறந்த வாசிப்பனுபவமாக இருந்தது. தர்க்கம் என்பது எப்படி இருக்க வேண்டும், அதன் பல்வேறு பரிமாணங்கள் யாவை என்பதை நமக்குக் காட்டியிருக்கிறார் தமிழ்ப்பெருங்கடல் மு.வ. தெள்ளத்தெளிவான ஒரு நடுநிலைகொண்ட ஆராய்ச்சி இது. பாடலின் ஒவ்வொரு சொல்லுக்கும் தனித்தனியே சில பக்கங்கள் அளவில் விளக்கம் கூறுகிறார் மு.வ.
“பயிலியது கெழீஇய” என்ற சொற்களைக் கொண்டு இப்பாடல் தலைவனால் தலைவியின் நலத்தைப் பாராட்டி எழுதப்பட்டது. வேறு யாராலும் இந்த அனுபவத்தைக் கூறமுடியாது என்ற முடிவுக்கு வருகிறார். பாடலில் இடமும் காலமும் நேரடியாக கூறப்படாவிட்டாலும் அவை மறைமுகமாகக் கூறப்பட்டிருக்கின்றன எனக்காட்டுகிறார். உதாரணமாக, தும்பிகள் கொங்குதேரும் காலம் இளவேனில் என்பதால் இது இளவேனிற்காலத்தில் பாடப்பட்ட பாடல் என்கிறார். இதுபோல் இன்னும் பலவிவரங்களை எடுத்தியம்புகிறார் மு.வ. வேறொரு சிறப்பும் இந்நூலில் உண்டு. வெறுமனே விளக்கமாக மட்டும் கூறாமல், கொங்குதேரும் தும்பியை, இலக்கியத்தை நாடும் புலவர் பெருமக்களாக உருவகப்படுத்தி, இரட்டுறமொழிதல் முறையில் இவ்வாராய்ச்சியை நிகழ்த்தியுள்ளார் மு.வ.
அனாயாசமாக பல தமிழ் நூல்களை மேற்கோள் காட்டுவதல்லாமல், ஜான்சன், கீட்ஸ், ஷெல்லி, வேட்ஸ்வொர்த், உமர் கய்யாம் போன்ற பிறமொழி, வேற்றுநாட்டு புலவர்களையும் சுட்டிப்பேசுகிறார். இத்தகைய ஒரு உரையை நிகழ்த்தவேண்டுமானால் தமிழ்மொழியில் மட்டுமின்றி உலக இலக்கியத்திலும் நல்ல தேர்ச்சி வேண்டும் என்பது தெளிவு.
மொத்தத்தில் இந்நூல் முவவின் உலகிற்குள் நுழைவதற்கான ஒருசோற்றுப்பதமாக எனக்கு அமைந்தது.
--- வ. ரமணன்
5 மு.வ.-வின் தமிழ்ப்புலமைக்கொரு சான்று
திருவிளையாடல் திரைப்படத்தில் வரும் தருமி கதையைப் பார்க்காதவர்கள் மிகச்சொற்பமாகவே இருக்கக்கூடும். இறையனாராக நடிகர் திலகம், நக்கீரராக அப்படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான ஏ.பி. நாகராஜன், தருமியாக நம் பேரன்புக்குரிய நாகேஷ், செண்பகப் பாண்டியனாக நம் அரிய கலைஞன் முத்துராமன் ஆகியோர் தங்களின் தன்னிகரற்ற கலைத்திறமையால் அந்தக்காட்சியைச் செதுக்கி, மெருகேற்றி அதனையொரு நித்திய ஜீவ காவியமாக்கினார்கள். அதில் வரும் வசனங்களை நம்மால் மறக்கத்தான் முடியுமா? இந்தக் கலைஞர்களின் உழைப்புதான் எத்தகையது! வீடுதோறும் நற்றமிழைக் கொண்டுபோய்ச் சேர்த்தார்கள் அல்லவா! இன்று வெளியாகும் பெரும்பாலான திரைப்படங்கள் குடிகாரன் வாந்தி எடுத்தது போல்தான் உள்ளன. போகட்டும். சில காலமாக என் மனதிற்குள் இந்தப்பாடலைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தேன். அச்சயமத்தில் நான் வழக்கமாக புத்தகங்கள் வாங்கும் ஒரு வாட்சப் குழுமத்தில் “கொங்குதேர் வாழ்க்கை” எனத்தலைப்பிடப்பட்ட புத்தகத்தைப் பார்த்தேன். நாம் எதைப்பற்றி எண்ணுகிறோமோ அதுதொடர்பான விவரங்களை பிரபஞ்சம் நமக்கு வழங்கும்போலும். உடனே அப்புத்தகத்தை வாங்கினேன். மு.வ எனப்பொதுவாக குறிப்பிடப்படும் தமிழறிஞர் திரு.மு.வரதராசன் அவர்களால் எழுதப்பட்ட புத்தகம். இரண்டாம் பதிப்பு. 1956-ஆம் ஆண்டு வெளிவந்தது. அவர் 1949-ல் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் ஆண்டு விழாவில் ஆற்றிய சொற்பொழிவே இந்நூல். மு.வ வின் எழுத்துகளை நான் அதிகம் படித்ததில்லை. என் இளங்கலைப்படிப்பின்போது, பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருந்த “நல்வாழ்வு” எனும் கட்டுரைத்தொகுப்பையும் அவரது புகழ்பெற்ற நூலான “தமிழ் இலக்கிய வரலாறு” நூலையும் மட்டுமே படித்திருக்கிறேன். இந்தப்புத்தகம், ஏன் மு.வவை இவ்வளவு நாட்கள் படிக்கவில்லை என்ற ஆதங்கத்தை என்னுள் ஏற்படுத்தியது. குறுந்தொகையில் இறையனார் என்ற புலவர் எழுதிய ஒரே ஒரு சங்கப்பாடல் மட்டுமே நமக்குக் கிடைத்திருக்கிறது. ஆனால் அது அதிகமுறை அறிஞர்களால் விவாதிக்கப்பட்ட பாடல். திருவிளையாடல் திரைப்படத்தில் மூலமாக தமிழ் இல்லங்களை வந்தடைந்த பாடல். “கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல் செறியெயிற் றரிவை கூந்தலின் நறியவும் உளவோ நீயறியும் பூவே” இந்த ஒரு பாடலை மட்டும் 73 பக்கங்களில் விவரித்திருக்கிறார் மு.வ. ஆராய்ச்சி என்றால் இதல்லவா ஆராய்ச்சி என்று தோன்றியது. ஒரே ஒரு சங்கப்பாடலைப்பற்றிய இத்தனை செறிவானதோர் தர்க்கவியல் சார்ந்த ஆராய்ச்சி நூலைப்படித்தது ஒரு சிறந்த வாசிப்பனுபவமாக இருந்தது. தர்க்கம் என்பது எப்படி இருக்க வேண்டும், அதன் பல்வேறு பரிமாணங்கள் யாவை என்பதை நமக்குக் காட்டியிருக்கிறார் தமிழ்ப்பெருங்கடல் மு.வ. தெள்ளத்தெளிவான ஒரு நடுநிலைகொண்ட ஆராய்ச்சி இது. பாடலின் ஒவ்வொரு சொல்லுக்கும் தனித்தனியே சில பக்கங்கள் அளவில் விளக்கம் கூறுகிறார் மு.வ. “பயிலியது கெழீஇய” என்ற சொற்களைக் கொண்டு இப்பாடல் தலைவனால் தலைவியின் நலத்தைப் பாராட்டி எழுதப்பட்டது. வேறு யாராலும் இந்த அனுபவத்தைக் கூறமுடியாது என்ற முடிவுக்கு வருகிறார். பாடலில் இடமும் காலமும் நேரடியாக கூறப்படாவிட்டாலும் அவை மறைமுகமாகக் கூறப்பட்டிருக்கின்றன எனக்காட்டுகிறார். உதாரணமாக, தும்பிகள் கொங்குதேரும் காலம் இளவேனில் என்பதால் இது இளவேனிற்காலத்தில் பாடப்பட்ட பாடல் என்கிறார். இதுபோல் இன்னும் பலவிவரங்களை எடுத்தியம்புகிறார் மு.வ. வேறொரு சிறப்பும் இந்நூலில் உண்டு. வெறுமனே விளக்கமாக மட்டும் கூறாமல், கொங்குதேரும் தும்பியை, இலக்கியத்தை நாடும் புலவர் பெருமக்களாக உருவகப்படுத்தி, இரட்டுறமொழிதல் முறையில் இவ்வாராய்ச்சியை நிகழ்த்தியுள்ளார் மு.வ. அனாயாசமாக பல தமிழ் நூல்களை மேற்கோள் காட்டுவதல்லாமல், ஜான்சன், கீட்ஸ், ஷெல்லி, வேட்ஸ்வொர்த், உமர் கய்யாம் போன்ற பிறமொழி, வேற்றுநாட்டு புலவர்களையும் சுட்டிப்பேசுகிறார். இத்தகைய ஒரு உரையை நிகழ்த்தவேண்டுமானால் தமிழ்மொழியில் மட்டுமின்றி உலக இலக்கியத்திலும் நல்ல தேர்ச்சி வேண்டும் என்பது தெளிவு. மொத்தத்தில் இந்நூல் முவவின் உலகிற்குள் நுழைவதற்கான ஒருசோற்றுப்பதமாக எனக்கு அமைந்தது. --- வ. ரமணன்
Ramanan 06-09-2024 05:59 pm