தமிழகத்தின் பாரம்பரியத்தைப் பேசும் ஐந்து மண்டலங்களில் கொங்கு நாடும் ஒன்று. வளம் நிறைந்த உள்ளூர் மரபைக்கொண்டுள்ள இந்த நிலப் பகுதியில் சாதி அமைப்பு இன்னமும் இருக்கிறது.
கொங்கு நாட்டின் கிளைச்சாதிகள் மத்தியில் செயல்படும் பலவித உள் சமுதாய அமைப்புகளுக்குள் நடந்த ஆய்வால் உருவான இந்தப் புத்தகம், எண்ணற்ற அட்டவணைகள், வரைபடங்கள் மற்றும் புகைப்படங்களுடன் நிறைவாகக் காணப்படுகிறது. ஒரு பொதுவான கோட்டுச் சித்திரத்தை வழங்கி, விரிவான தரவுகள் இணைந்த இணையற்ற பணியாக விளங்குகிறது; இந்திய இனவரைவியல் அறிவுக்குப் பெரும் பங்களிப்புச் செய்யக்கூடியதாகவும் இருக்கிறது.
***
ஒரு பிரதேசத்தின் வாழ்வு முறையைப் பொதுப் புத்தியிலிருந்து விடுவித்து மானிடவியல் வாசிப்பாக முன்னெடுப்பதே ‘கொங்குக் குடியானவர் சமூகம்.’ கணவனும் மனைவியும் கலந்து வார்க்கும் குழந்தை போன்று, அகண்ட பிரதேசம், சாதிய முறை, வழிபாட்டு முறை ஆகிய மூன்றும் எவ்வாறு பிணைந்து சமூக வாழ்வாக வார்க்கப்படுகிறது என்பதை இதுவரை யாரும் காட்சிப்படுத்தியதில்லை.
வரலாற்றின் மிக நீண்ட காலகதியில் ஒரு பிரதேசம் எப்படி ஒரு மைய நிறுவனமாக ஆக்கம் பெறுகிறது என்பதும், இந்தப் பிரதேசத்தோடு எவ்வாறு 96 வகையான வலங்கை, இடங்கைச் சாதிகள் தொடர் நிறுவனங்களாகப் பரிணமிக்கின்றன என்பதும் ஒரு மின்னல் வெளிச்சமாக இந்த நூலில் மிளிர்கிறது. ஒரு பிரதேசத்திற்கும் சாதிகளுக்கும் உள்ள உடல்-உயிர் போன்றதோர் உள்ளார்ந்த உறவை இந்திய அளவில்
பிரண்டா பெக் முதல் முறையாக விவரித்துள்ளார்.
சமூக அசைவியக்கத்தில் வலங்கை-இடங்கைப் பிரிவுகளின் மேல்தட்டுச் சாதிகளே சமூக முரண்பாடுகளைக் கூர்மைப்படுத்துகின்றன என்பதையும் இந்த நூல் விவாதிக்கிறது. சாதிப் படிநிலைக்கு ஏற்ப சடங்கு முறைகளும் படிநிலைப்படுகின்றன என்பதை மிக அற்புதமாக நிரூபிக்கிறார்.
பிரண்டா பெக் கனடா நாட்டுப் பெண் மானிடவியலர். சிலப்பதிகாரம், அண்ணன்மார் சாமி கதை முதலானவற்றையும் ஆராய்ந்துள்ளவர். சுருக்கமாகச் சொன்னால் விடுதலை இந்தியாவில் சாதி முறையை மானுடம் சார்ந்தும் சமூகம், பண்பாடு, மண் சார்ந்தும் நுட்பமாக வாசிக்கும் ஒரு புதிய அணுகுமுறையை இந்த நூல் நமக்குக் காட்டுகிறது.
Be the first to rate this book.