கவிதையை விரிவுரை தந்து புரியவைக்க முடியாது. மாறாக வாசிப்பனுபவத்தின் மூலமாக நாம் எதைக் கண்டடைகிறோமோ அதுதான் கவிதை. அதற்கு நியாயம் செய்பவனே கவிஞன். அப்படியான நியாயத்தை இந்தத் தொகுப்பு நிறையச் செய்திருக்கிறார் தென்றல்.
இலக்கியத்தின் மற்ற அறைகளைவிடக் கவிதையறை அளவில் குறுகியது. ஆனால் பேரன்பில் விசாலமானது. கவிதை எழுதுபவன் பூமியை ஓரங்குலம் நகர்த்திவிடவா முடியும்? இல்லை. ஆனால் அவன் தன்னளவில் பூமியைக் காலுக்கடியில் வைத்துக் கழுத்திலேறி மிதிக்கும் அமானுஷ்யம் பெறுகிறான். அது ஒரு தன்னிகழ்வு. சுயாசுவாசம். ஆனால் மண்புழு தன் இரை கருதியே மண்ணைக் குடைகிறது. ஆனால் கிடைப்பது புழுவுக்கு இரை மட்டுமல்ல. மண்ணுக்கு உரம். தென்றலும் இப்படியான பயணத்தில் உருவான கவிஞன்தான். ஆனால் அந்தக் கவிஞனுக்குள் தோற்றுப்போன பிண்டங்களின் வலி, ஏமாற்றங்களின் முறையீடு, ஊழலுக்கான காரித்துப்பல், சுற்றுச்சூழலுக்கான பெருங்கருணை, இயற்கையுடனான மென்புணர்ச்சி, அறிவியலுடனான ஆரத்தழுவல், பாரம்பரியத்துடனான பரிவோம்பல் என்று சகலமும் சந்தி பிரித்து நிற்கின்றன.
மொழியைக் கருவேந்தி உயிர் வளர்த்து இன்று அவர் அடைந்திருப்பது தென்றல் எனும் சுகப்பிரசவம். சண்டிவலியெடுத்த தண்டபாணிகளின் நெற்றி வியர்வையைத் தென்றல் துடைக்க வேண்டும். நல்ல படைப்புகள் வாசிக்கப்படாமல் போனால் இழப்பு தென்றல்களுக்கல்ல.
- முனைவர் செ. சதீஸ்குமார்
Be the first to rate this book.