அதிகாரம் தரும் மயக்கநிலை மற்ற எந்த மயக்க நிலையை விடவும் ஆபத்தானது. ஏனெனில், மற்ற மயக்கங்கள் சம்பந்தப்பட்டவரை மட்டும் பாதிக்கும். அதிகாரப் போதை எல்லோரையும் துன்புறுத்தும், துயரப்படுத்தும். ஆதி கால மன்னர்கள் முதல் அண்மைக் கால ஆட்சியாளர்கள் வரை அதிகாரத்தை வைத்துக்கொண்டு ஆட்டம்போடுவது மட்டும் மாறவில்லை. ஒரு நாட்டை வழிநடத்தும் நிலையில் இருப்பவர்கள், அதிகாரப் பித்து அதிகமாகி தங்கள் விருப்பம்போல் செயல்பட ஆரம்பித்தால் என்னவெல்லாம் நடந்தேறும் என்பவையெல்லாம் வரலாற்றின் பக்கங்களில் விரவிக் கிடக்கின்றன. அந்தப் பக்கங்களில் இருக்கும் கிறுக்கு ராஜாக்களின் கேலிக்குரிய நடவடிக்கைகளையும் அதனால் விளைந்த விபரீதங்களையும் சுவாரஸ்யமாகக் கூறுகிறது இந்த நூல். நம் காலத்திலேயே வாழ்ந்த சில சர்வாதிகார அதிபர்களின் அடாத செயல்களையும் அழுத்தமாகக் கூறுகிறார் நூல் ஆசிரியர் முகில்.
யானை ஒன்று கால் இடறி, அலறலுடன் பள்ளத்தில் உருண்டு விழுந்து கதறி இறக்க, அந்தக் கதறலும் வலியின் பிளிறலும், மிகிரகுலன் எனும் மன்னனின் காதுகளுக்கு மெல்லிசையாக ஒலிக்கவே, ‘‘அட, இந்த இசை இன்பமாக இருக்கிறதே. இன்னொரு யானையைத் தள்ளிவிடுங்கள்!’’ என்று கூறினானாம். அவனைப் போல, மறை கழன்றவர்கள், மதிகெட்டவர்கள், குரூரர்கள், காமக்கொடூரர்கள், அதிகாரப் போதை அரக்கர்கள், மமதையேறிய மூடர்கள், வக்கிர வஞ்சகர்கள், ரத்தவெறி ராட்சஷர்கள், பித்தேறிய பிணந்தின்னிகள்... என பலதரப்பட்ட கிறுக்கர்களும் இந்த நூல் முழுக்க வலம் வந்து நம்மை அதிரவைக்கிறார்கள். இப்படியும் இருப்பார்களா... இப்படியும் செய்வார்களா... என வியக்கவைக்கும் கிறுக்கு ராஜாக்களைக் காணச் செல்லுங்கள்.
Be the first to rate this book.