உலகமயமாக்கலின் காரணமாக நவீன மனம் உணரும் அந்நியத்தன்மை, வாழ்க்கையில் தோற்றுப் போனதான உணர்வு, வெகு சாதாரணமானதொரு நிகழ்வு சட்டென்று அசாதாரணமானதாக மாறும் சூழல், நிகழ்காலமும் கடந்தகாலமும் ஒன்றோடொன்று முயங்கி மனிதர்களின் முன் கனவாக விரிந்திடும் மாயத்தோற்றங்கள் போன்ற சங்கதிகளை ஹருகி முரகாமியின் சிறுகதைகளில் பொதுவாகக் காணக்கிடைக்கும் கூறுகளெனச் சொல்லலாம். கண்ணுக்குப் புலப்படாத வாழ்வின் புதிர்வழிப்பாதைகளையும் அவற்றில் சிக்கிக்கொள்ள நேர்ந்திடும் எளிய மனிதர்களின் அனுபவங்களையும் இருண்மையான நகைச்சுவையோடு வாசகனுக்கு எளிதாகக் கடத்திட முரகாமியின் நேரடி கதைசொல்லல் யுக்தி பெரிதும் உதவுகிறது. ஏதோவொரு செயலில் ஈடுபடுகிற மனிதன் எதிர்கொள்ளும் எதிர்பாரா நிகழ்வுகளின் தொகுப்பே அவனுடைய வாழ்க்கையின் அர்த்தமாக மாறிடும் என்கிற முரகாமியின் நம்பிக்கையை இந்தக் கதைகள் வலியுறுத்திச் சொல்கின்றன.
Be the first to rate this book.