எழுதி உலகத்தை ஜெயிக்கவெல்லாம் எழுத வரலே... உள்ளுக்குள்ள இருக்கிற வலியை எழுத்தைக் கொண்டு ஆத்திக்கிறேன் அவ்வளவுதான்!
இன்னைக்கும் வலிக்க வலிக்க அடிச்சுக்கிட்டிருக்கிற மேல்தட்டு மக்களை எதுத்துக் கேக்கமுடியாம, நீ குட்டிச்சுவராப் போயிருவே’ன்னு மனசுக்குள்ளயே திட்டிட்டு அமைதியாப் போறான் பாருங்க அந்தமாதிரி எழுதிட்டுப் போறேன் என கூறும் எழுத்தாளர் பாப்லோ அறிவுக்குயில் அவர்களின் படைப்புக்களை போல அவரது வாழ்வும் பெரும் போராட்டங்கள் நிறைந்தது.
சிறந்த வாசகனாக இருந்து எழுத்தின்பால் நேசம் கொண்டு எழுத முனைபவர்கள் அநேகம்.
தங்கள் வாழ்வில் சுற்றும் சூழ நிகழ்ந்த சமூக நிகழ்வுகளை, சாட்சியமாய் குரலற்றவர்களின் குரலாய் வெளிப்படுத்தும் மக்களின் கலைஞர்கள் ஒவ்வொரு தசாப்தத்திலும் தோன்றுவது அரிதினும் அரிதென்றால் மிகையில்லை.
90 களில் வெண்மான் கொண்டான் பகுதியை சேர்ந்த பாப்லோ அறிவுக்குயில் எனும் இளைஞர் வாழ்வில் நாடோடியாய் பயணிக்கிறார்.
இயல்பான கவிஞனாக வலம் வந்த அறிவுக்குயில் அவர்கள் சக தோழர்களால் அரசியல்படுத்தப்பட்ட பின்னே, நவீன கவிஞனாக பரிணமிக்கிறார்.
உழைக்கும் வர்க்த்தின் அங்கத்தினராய் பயணித்து மக்களின் சமூக எதார்த்த கதைகளை எந்த வித ஒளிவு மறைவும் இன்றியே அப்படியே குறுநாவல் சிறுகதைகள் என கலைப்படைப்பாக வெளிப்படுத்தி தொடர்ந்து வஞ்சிக்கப்பட்ட மக்களின் கதைகளை பேசுபொருளாக்கி ஆவணமாக்குகிறார்.
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் கருவிடச்சேரி கிராமத்தில் வசிக்கும் படைப்பாளியின் இயற்பெயர் வீ.அறிவழகன்; பிறந்த ஊர் அதே மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் வெண்மான்கொண்டை கிராமத்தை சேர்ந்தவர்.
95 ஆம் ஆண்டு விளிம்பு டிரஸ்ட் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்ட கிளுக்கி புத்தக தொகுப்பு நெடுங்கதைகள் சிலவும்,சிறுகதைகள் சிலவும் என 9 கதைகளாக தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.
நூலாசிரியரது முதல் கதை "மேய்ச்சல் நிலந்தேடி" எனும் நெடுங்கதை! இக்கதை கிராமத்தில் இருந்து நகரம் நோக்கி சென்ற சிறுவனின் வாழ்வு எதிர்கொண்ட கொடுந்துயர்களை பேசுகிறது.
தொடக்கத்தில் கவிதைகள் எழுதினாலும் தமிழில் தலித் இலக்கியம் வீறுகொண்டெழுந்த தருணத்தில் இவரது முதல் படைப்பான "கிளுக்கி"தொகுப்பு ஏற்படுத்திய அதிர்வலைகள் அசாதாரணமானது.
பாப்லோ அறிவுக்குயிலின் மனதினில் பசுமரத்தாணி போல பதிந்துள்ள அவர் காலத்து நிகழ்வுகள் அவரது கதைகளின் பக்கங்களில் காட்சிகளாக நம் கண்முன்னே விரிகிறது.
கிராமங்களில் இன்றவும் தொடர்ந்து வரும் சாதிய கட்டுமானங்கள் குறித்து எதிர் கேள்விகளை விளிம்பு நிலையில் வாழும் தலித் மக்கள் கேட்கும் போதெல்லாம் அவர்கள் ரத்தம் சிந்த ஏதுவான பயங்கரவாதங்களை கட்டவிழ்த்து தொடர்ந்து அடிமை மனோபாவத்தை தொடர வைத்திருக்கும் சமூகத்தின் கட்டுமானங்களே பாப்லோ அறிவுக்குயிலின் கதைகள் பிறக்க காரணமாய் இருந்ததாக நூலாசிரியர் தனது முன்னுரையில் கூறுகிறார்.
"வெண்மணியில்,சுண்டூரில்,காரணையில், வாச்சாத்தியில் இப்படி இன்னும் இன்னும் சாதியம் தன் கோரப்பல்லில் மனுச ரத்தம் வழிய வழிய எம்மக்களையே நரவேட்டையாடி வருகிறது.
இந்த நீதிமன்றம்,காவல்துறை, அரசு எல்லாம் முதலாளிகளோடும், பண்ணைகளோடும், மதவாதிகளோடும் சாதீயத் தலைவர்களோடும் கைகோர்த்துக்கொண்டு சாதியத்தைக் காத்தும், அதை உடைக்க முனையும்போது அதிகார திமிரோடு துப்பாக்கிச் சூடு நடத்தியும் காவல் நிலையங்களில் பாலியல் வன்முறை நிகழ்த்தியும் எம்மக்களை ஒடுக்கி வரும் பொழுது, இந்தச் சகல வித அடக்குமுறைகளையும் எதிர்த்துப் போராடுவதே வாழ்க்கை என்பதை உணர்ந்து என்னால் இயன்றளவு எழுதியும் பேசியும் வாழ்ந்தும் வருகிறேன் " என தனது லட்சியப்பயணம் குறித்து மிக தெளிவான சேதியை சொல்கிறார் அறிவுக்குயில்.
கிளுக்கி தொகுப்பை மறு வெளியீட்டு பதிப்பாக நம் சமகால தலைமுறைக்கு மக்களின் கதைகளை கொண்டு சேர்த்த எமது நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் மக்களுக்கான இலக்கியங்களை தொடர்ந்து வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறது.
Be the first to rate this book.