கற்புக்காமம், இக்கதைகளில் மீறலான 'களவுக் காம'மாகவும் தேவதாஸி மரபைச் சேர்ந்த பரத்தைமைக் காமமாகவும் விஸ்தரிக்கப்படுகிறது. இது சமண, பௌத்த சமூக தளங்களைப் பாலியல் பகடிக்கு உட்படுத்துவதோடு மட்டுமல்லாது சமண, பௌத்தம் தீவினை என்று ஒதுக்கிய காமியத்தை வைதீக மரபின் காமியக் கலையாக உருமாற்றுவதாகவும் செயல்படுகிறது. தேவதாஸிக் காமிய மரபோடு களவுக் காமமாக (மீறலாக) வெளிப்படுகிற கற்புக்காமத்தை ஒன்றிணைத்த வேலைப்பாடு இக்கதைகளில் உள்ளார்ந்து காணப்படுகின்றது. எந்த ஆசையைச் சமண, பௌத்தம் கைவிடச் சொன்னதோ அந்த ஆசையை இந்தக் கிளிக் கதைகள் வழியாக வைதீக - பிராமணியம் அரசியலாக்கியுள்ளது.
சமண பௌத்தத்தை எதிர்த்த கலாச்சாரப் போராட்டத்தில் வைதீக பிராமணியம் நாட்டுப்புறப் பாலியல் பகடியைப் பயன்படுத்திய அரசியல் ஒன்றை இக்கதைகளில் இலைமறை காயாக இருப்பதை அவதானிக்கலாம். சமண - பௌத்த மார்க்கங்களை எதிர்த்த போராட்டத்தில் இவ்விதமான பாலியல் பகடி சார்ந்த அரசியல் வைதீக - பிராமணியத்தின் முக்கியமான புனைவுசார் அரசியலாக இந்திய உபகண்டம் முழுவதிலும் செயல்பட்டு வந்துள்ளது. எனவே, கதைகள் வெறும் பொழுதுபோக்குக் கருவிகள் மட்டுமல்ல; அவை கலாச்சாரத் தளத்தில் நிகழ்த்தப்படுகிற கருத்தியல் போராட்டங்களின் வலிமை வாய்ந்த ஆயுதங்களாகவும் செயல்படுகின்றன.
Be the first to rate this book.