'கயிறு’ நீண்டதொரு காலகட்டத்தின் வரலாறு. குட்டநாடு என்ற கிராமத்தில் பல தலைமுறைகளாக மனிதன் வாழ்ந்து வந்த கதை. என்னுடைய பார்வையில் தேசத்தின் வரலாறு என்பது மனிதன் எப்படி மண்ணுடன் உறவுகொண்டு வாழ்ந்தான் என்பதுதான். இந்த நாவலின் படைப்பில் கதை சொல்ல நான் எடுத்துக் கொண்ட நிகழ்ச்சிகள்தான் மிகவும் கவனிக்கத்தக்கவை என்று எனக்குத் தோன்றுகிறது. மகாபாரதத்தின் கதை நிகழ்ச்சிதான் எனக்குத் தூண்டுதலாக அமைந்தது. அத்துடன் என்னுடைய கிராமத்திற்கே உரிய கதை சொல்லும் சம்பிரதாயங்களும் உண்டு. நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா இந்த நாவலின் சுருக்கப் பதிப்பை வெளியிடத் தீர்மானித்தபோது அது வெற்றி பெறுமா என்று நான் சந்தேகப்பட்டேன். காரணம், சுருக்கி எழுத முடிவதான ஒரு நாவல் அல்ல இது. அதை விரிவுபடுத்தி எழுதவும் முடியாது. அதற்கென்று தனித்ததோர் உருவமைப்பு உண்டு. அந்த உருவமைப்பின் போக்கில்தான் நாவல் முன்னோக்கிச் செல்கிறது. என் அறிவுக்குப் புலப்பட்ட வரையில் இந்த நாவலைச் சுருக்கித் தருவதில் முனைவர் வேணுகோபாலன் வெற்றி பெற்றிருக்கிறார். 'கயிறு' நாவலிலிருந்து ஒரு சுயசரிதை நாவலை எழுதியது போலிருக்கிறது, இந்த நாவலின் சுருக்கப் பதிப்பு. ஒரு வேளை 'கயிறு' நாவலில் விவரிக்கப்பட்டுள்ள வாழ்க்கை , முனைவர் வேணுகோபாலனுக்கும் அறிமுகமானது என்பதால் இருக்கலாம்.
Be the first to rate this book.