‘என்னுடைய ஒப்புதல் வாக்குமூலமாக காவல் துறை செய்த சித்திரிப்புகள்தான் என்னை இன்றைக்கு தூக்குக் கயிற்றின் முன்னால் நிறுத்தி இருக்கின்றன. கயிறா உயிரா எனத் தெரியாமல் தவிக்கும் என்னுடைய உண்மையான ஒப்புதல் வாக்குமூலம், ஜூனியர் விகடனில் நான் பகர்ந்த தொடர்தான்!’ - முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், தூக்கு தண்டனைக் கைதியாக மரணத்தின் விளிம்பில் அல்லாடும் முருகன் சொன்ன வார்த்தைகள் இவை. ‘09-09-11 அன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும்’ என அரசு அறிவித்திருந்த வேளையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி மூவரின் தூக்குக்கும் இடைக்காலத் தடை வாங்கப்பட்டது. மரண மேகம் சூழ்ந்திருந்த அந்த இக்கட்டான சூழலில் தன் தரப்பு நியாயத்தைச் சொல்லும் கடைசி வாய்ப்பாக, ஜூனியர் விகடனில் ‘கயிறே, என் கதை கேள்!’ என்ற தலைப்பில் முருகன் பகர்ந்த தொடரின் தொகுப்பே இந்த நூல். விசாரணை என்ற பெயரில் முருகனும் அவர் மனைவி நளினியும் எதிர்கொண்ட சித்ரவதைகளைப் படிக்கையில், அதிகாரத் தரப்பின் வெறியாட்டம் நெஞ்சில் அறைகிறது. உள்ளத்து உண்மையாக - உணர்வுகளின் கதறலாக முருகன் அனுபவித்த ஒட்டுமொத்த வலியையும் இந்த நூல் அப்படியே அம்பலப்படுத்துகிறது. முருகனுக்கும் சிவராசனுக்குமான நட்பு, கொலைகளத்தில் நளினியின் பங்கு, இவர்கள் எப்படிக் குற்றவாளி ஆக்கப்பட்டனர்... என, முருகன் விவரிக்கும் உண்மைகள் எவரையும் உலுக்கக்கூடியவை. முருகன் கடந்து வந்திருக்கும் 21 வருட கொடூரமான நிகழ்வுகளின் தொகுப்பே இந்த நூல்.
Be the first to rate this book.