நவீன கவிதையை எப்படி புரிந்துகொள்வது? நவீன கவிதைகளின் மொத்தச் சொற்களைக் காட்டிலும் கூடுதலான அளவில் அந்தக் கவிதைகளைப் பற்றிக் கவிஞர்களும் விமர்சகர்களும் வாசகர்களும் எழுதியிருக்கிறார்கள்; என்றாலும் நவீன கவிதையின் ரகசியங்கள் பிடிபடாமல் நழுவுகின்றன.
கவிதைக்குள்ளிருந்து கவிதையைப் பேசுவதன் மூலம் இந்தப் புதிரை விடுவிக்க முயல்கிறார் க.வை. பழனிசாமி. தமிழின் முக்கியமான கவிஞர்களில் 14 பேரின் கவிதைகளை முன்வைத்து அவர் இந்தச் சவாலை மேற்கொள்கிறார். கவிதைக்குள்ளேயே அதைத் திறக்கும் திறவுகோல் இருப்பதைத் தன் கூர்மையான, சொற்களை ஊடுருவும் வாசிப்பினூடே கண்டடைகிறார். அந்த அனுபவத்தைப் பூடகமற்ற சொற்களின் மூலம் பகிர்ந்துகொள்கிறார்.
ந. பிச்சமூர்த்திமுதல் அனார்வரை பல தலைமுறைகளைச் சேர்ந்த, பல்வேறு கவித்துவ அணுகுமுறைகள் கொண்ட கவிஞர்களின் கவிதைகளினூடே நிதானமாகப் பயணம் செய்யும் பழனிசாமி, அந்தப் பயணத்தில் தான் அடைந்த தரிசனங்களை இந்நூலில் முன்வைக்கிறார். கவிதையின் ரகசியங்கள், பல்வேறு கவியுலகங்கள் ஆகியவற்றுடன், மாறுபட்ட கவித்துவப் பார்வைகளும் இதில் வெளிப்படுகின்றன.
கவிஞரும் விமர்சகருமான பழனிசாமியின் இந்த முயற்சி, நவீன கவிதையை வாசகரின் மனத்துக்கு நெருக்கமாகக் கொண்டுவந்து நிறுத்துகிறது. கவிதையை அணுகுவதற்கான மாறுபட்ட முறைமைகளை அறிமுகப்படுத்துகிறது.
Be the first to rate this book.