செழிப்பான மண்ணும், வளமான வாழ்வும் வாய்த்த மக்களிடையில்தான் கலையும், இலக்கியமும் செழித்திருக்கும் என்பது பெரும்பான்மை வரலாறு. வயிற்றின் வெம்மை தணிந்தவர்களால்தான் மற்ற சுக போகங்களுக்கு ஆசைகொள்ள முடியும். சோற்றுக்கும் துணிக்கும் தாளம் போடுகிற எமது மக்களால், ஆதி தாளத்தையும், ஆனந்த ராகத்தையும் தேடிப் போக முடியாது. இயற்கை வளத்தில் மட்டுமல்ல, இலக்கிய வளத்திலும் வட மாவட்டங்கள் வறட்சியான மாவட்டங்கள் என்று சுமத்தப்படுகிற குற்றச்சாட்டுகளை இந்தப் பின்புலங்களிலிருந்து நான் மறுக்கத் தொடங்குகிறேன்.
பசி வந்திட பத்தும் பறந்து போம்…. என முன்னோர்கள் சொல்லி வைத்திருந்தாலும், வலியும் வேதனைகளும் நிறைந்த மண்ணிலிருந்துதான் அசலான இலக்கியங்களும் பீறிட்டுக் கிளம்பியிருக்கின்றன. பெரு நில மன்னர்களும், ஜமீன்தார்களும், பண்ணையார்களும் வாழ்ந்த வாழ்விற்கும், கவலை ஓட்டி நீர் இறைத்து, புன்செய் விவசாயம் செய்து வயிறு நனைத்த எமது முன்னோர்களின்
வாழ்விற்குமான இடைவெளி வெகு அதிகம்.
இந்தப் பின்புலத்திலும், ஆற்றின் அடியாழத்தில் சுரக்கிற மணல் ஊற்றுக்களைப் போல… எங்கள் மண்ணிலும் இலக்கியமும், கலையும் பிறந்திருக்கிறது. காத்திரமான இலக்கியவாதிகள் வாழ்ந்திருக்கிறார்கள். வாழ்கிறார்கள். பெரும் பட்டியல் போட்டு பெருமைப்பட முடியாவிட்டாலும், இப்போதும் எங்கள் மண்ணிலிருந்து அசலான படைப்புகள் வருகின்றன. எங்களது மண்ணின் வலிகளையும், வலிமைகளையும் அவை உரத்துப் பேசுகின்றன.
Be the first to rate this book.