தமிழில் மிகக் குறைவாக வந்துள்ள தன்வரலாறுகளில், பெண் தன் வரலாறுகள் தனி வகையானவை. அழகிய நாயகி அம்மாளின் இந்தத் தன்வரலாறு நாவலாகப் பரிணமித்துள்ளது. இவர் புகழ்பெற்ற எழுத்தாளர் பொன்னீலனின் தாயார். இவருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. ஆனால் இந்தப் பாமரப் பெண்ணின் எழுத்து இன்று பேசுபொருளாகியுள்ளது.
பெண் எழுத்துத் தனித்துவமிக்கது என்பதற்கு ‘கவலை’ சாட்சியமாக நிற்கிறது. உணர்வுகள், மனவெழுச்சிகள், அகமுரண்கள், நிராசைகள் என விரியும் கதைக் களம் பின்னும் முன்னுமாக, முன்னும் பின்னுமாகப் பின்னப்பட்ட வாழ்வியல் மொழியாக மிளிர்கிறது.
குமரி மாவட்டத்தின் ஒரு சிற்றூரின் வரலாறு தொடங்கி, அக்கால நிலவுடைமைச் சமூகத்தின் சுரண்டல் வரலாறு, ஓர் எளிய குடும்பத்தின் குல வரலாறு, குடும்ப வரலாறு என எத்தனை எத்தனையோ வாழ்வியலை ‘கவலை’ பேசுகிறது. ஒரு நூற்றாண்டுக்கு முந்திய தமிழ் வாழ்வியலை ஒரு பெண் மொழியில் வாசிப்பது பெரும் பேறு எனலாம். ‘கவலை’ இதைச் சாத்தியப்படுத்தியிருக்கிறது.
- பக்தவத்சல பாரதி
Be the first to rate this book.