ஆனந்த விகடனில் 'கற்றதும்... பெற்றதும்' பகுதியில் பல்வேறு பொருளில் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகளை எழுதினார் எழுத்தாளர் சுஜாதா. அவருடைய கட்டுரைகளை வாசிக்கும் ஆர்வமுடன் ஏராளமான வாசகர்கள் வாரந்தோறும் காத்திருந்தனர்.
சமூக நிகழ்வுகளின் மீது விமர்சனம் வைத்து கட்டுரைகள் எழுதிய சுஜாதா, இடைவிடாமல் பல புத்தகங்களைப் படித்ததோடு, தினந்தோறும் பலரையும் சந்தித்தார். அந்தத் தகவல்களைக் கட்டுரையில் தந்தபோது, அந்த அனுபவப் பகிர்வு பலருக்கும் அரிய பொக்கிஷமாக இருந்தது. ஆதலால், பிறர் எழுதிய கட்டுரை, கதை, கவிதை, பொன்மொழி, மேற்கோள்கள் போன்றவற்றில் அவருக்குப் பிடித்ததையும் கட்டுரைகளில் குறிப்பிட்டு எழுதினார்.
சுஜாதாவின் கருத்தால் பெற்ற அங்கீகாரத்தால் இளம் படைப்பாளர்கள் பலன் பெற்றனர். கற்றதும்... பெற்றதும்... பகுதியில் வெளிவந்த கட்டுரைகள் நான்காம் தொகுப்பு என இந்த நூலாக வெளிவந்திருப்பது, அக்கட்டுரைகளுக்கு வாசகர்கள் தரும் உற்சாகத்தை வெளிப்படுத்துகிறது.
அரசியல்வாதிகளின் செயல்பாடு, பார்த்த சினிமாக்கள், கேட்ட பாடல்கள், படித்த புத்தகங்கள், நடந்த நிகழ்வுகள் போன்றவற்றை விமர்சித்தும், பாராட்டியும் எழுதியது வாசகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. மேலும், சென்னை அந்தக் காலத்தில் எப்படி இருந்தது? கருத்து சுதந்திரம் என்பது என்ன? பொது வாழ்வில் வெற்றி பெற என்னென்ன செய்ய வேண்டும்? வன்முறையையும் லஞ்சத்தையும் வெல்லக்கூடிய சக்தி எது? போன்றவை பற்றியும் அலசும் கட்டுரைகள் பல இந்நூலில் உள்ளன.
இப்புத்தகத்தின் இறுதியில் 2006ம் ஆண்டில் தொலைக்காட்சி, சினிமா, இசை, அரசியல், பத்திரிகை, விளம்பரம், இலக்கியம், விளையாட்டு போற்ற துறைகளில் சிறந்தவர்கள் யார் யார்? என்ற 'சுஜாதா அவார்ட்ஸ்' பட்டியலும் நகைச்சுவை கலந்து தந்திருப்பது ரசிக்கத்தக்கது.
Be the first to rate this book.