சுஜாதாவுக்கு எப்போதுமே நான் அதிக அவகாசம் தந்ததாக நினைவில்லை. தொடர்கதையோ... 'ஏன்... எதற்கு... எப்படி?' மாதிரியான தொடர்பகுதியோ... எதுவாக இருந்தாலும், 'இது சுஜாதா செய்தால் சரியாக இருக்கும்' என்று தோன்றிய நிமிடம், நான் தொலைபேசியில் அவரது எண்ணைச் சுழற்றிவிடுவேன். ஒருமுறைகூட அவர் மறுத்ததில்லை. உடனே கிளம்பி வருவார். 'அவுட்லைன்' ஐடியா சொல்வார். விவாதிப்போம். அத்தனை ஆலோசனைகளையும் திருத்தங்களையும் ஏற்றுக்கொண்டு. அவர் புறப்படும்போதே அறிவிப்பு வெளியிட்டுவிடலாம். என் பத்திரிகையுலக அனுபவத்தில், எனக்குக் கிடைத்த இனிய நண்பர்களில் முக்கியமானவர் சுஜாதா. அவரது படைப்புகளின் முதல் ரசிகன் என்ற பெருமிதம் எனக்கு எப்போதுமே உண்டு.
பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகும் பரபரப்பாக இருக்கிற மனிதர். ராஜீவ்காந்தியுடன் விமானத்தில் சுற்றியவர். ரஜினிகாந்த்துடன் சினிமா பேசியவர். அப்துல்கலாமுடன் நட்பு பாராட்டுபவர். நாட்டுப்புறப் பாடல்களைத் தேடுவார். கம்ப்யூட்டர் கருத்தரங்குகளில் உரையாற்றுவார். பல தளங்களில் இயங்கியபடி தன் வாழ்வினையும் தமிழ் வாசகர்களையும் சுவாரஸ்யப்படுத்தத் தெரிந்தவர்.
'கற்றதும்... பெற்றதும்...' _ விகடனில் சுஜாதாவின் வெற்றிகரமான தொடர்களில் ஒன்று. அவருக்கே உரித்தான குறும்புகள், அறிவியல் தேடல்கள், சாமர்த்தியமான சமூகச் சாடல்கள், எதிர்காலக் கனவுகள், கவலைகள், அனுபவப் பாடங்கள் எல்லாமே இந்தத் தொடரில் மின்னல் வேக நடையில் வாசகர்களை வசீகரித்தது.
இலக்கியம் முதல் இன்டர்நெட் வரை வாராவாரம் விகடனில் வந்த அவரது உலகத்துக்குள், இப்போது ஒரே மூச்சில் உலாப் போக உங்களை அழைக்கிறேன். 'இந்தத் தொகுப்பு உங்களுக்கு நிறையவே கற்றுத் தரும்' என உறுதியாக நம்புகிறேன்.
Be the first to rate this book.