கதைசொல்லல் என்பது நிகழ்வுகளைச் சொற்கள், படங்கள், ஒலிகள் போன்றவற்றின் மூலம் இன்னொருவருக்கு வெளிப்படுத்துவது.
இவ்வாறு கதைகளைப் பகிர்வதால் சமூக, கலாச்சாரச் செயல்பாடுகள் விரிவடைகின்றன. பெரும்பாலும் அது குறித்த நேரத் தேவைக்கு, பொருத்தமான உத்திகளுடனும் அலங்காரங்களுடனும் சொல்லப்படுகிறது. பொழுதுபோக்குக்காகவும் கல்வி, கலாச்சாரப் பாதுகாப்பு, ஒழுக்க விழுமியங்களை உணர்த்துதல் போன்ற தேவைகளுக்காகவும் கதைகளைப் பரிமாறிக்கொள்வது எல்லாப் பண்பாடுகளிலும் காணப்படுகின்றன.
***
கதையியல் என்னும் இந்த நூலில் க. பூரணச்சந்திரன், கதையில் விவரிப்பும் விவரிப்பு அமைப்பும் நமது கருத்தை எவ்வாறு பாதிக்கின்றன என்பது பற்றி விவரிக்கிறார். இதற்காகத் தமிழ்ச் சமூகத்தில் கதையின் இருப்பையும் இலக்கியத்தன்மையையும் பற்றி அறிமுகப்படுத்துகிறார். பிறகு கதையின் கூறுகளாக இருக்கும் கதைப்பின்னல், கதை அமைப்பு, கருப்பொருள், பாத்திரவார்ப்பு, நோக்குநிலை பற்றி விவாதிக்கிறார்.
மேலும் ஒரு கதைசொல்லலில் உணர்ச்சி வெளிப்பாடு, பின்னணி, வருணனை, சூழல், மனவுணர்வு, தொனி, குறியீடு, குறிப்புமுரண் போன்றவை எவ்வளவு முக்கியமான காரணிகளாக இருக்கின்றன என்பதை நமக்குக் காட்சிப்படுத்துகிறார்.
அத்துடன் கதையின் நடை, வாசிப்புமுறை, மதிப்பிடுதல், எடுத்துரைப்பியல், மீப்புனைகதைகள் குறித்த விவரிப்புக் கோட்பாட்டையும் இந்த நூலில் எளிமையாக விளக்குவது படிப்பதற்குப் புதிய அனுபவமாகவும் இருக்கிறது. இதன் மூலம் வாழ்க்கை முழுவதும் பரவலாக உள்ள கதைசொல்லலை சொல்லவும் கேட்கவும், எழுதவும் படிக்கவும், விமர்சித்து இரசனையை மேம்படுத்திக்கொள்ளவும் தேவைப்படும் நுட்பத்திறனைக் கற்றுத் தருகிறது இந்த நூல்.
கதைசொல்லல் என்னும் சமூகச் செயல்பாட்டில் ஈடுபாடுள்ள அனைவரும் கட்டாயம் படிக்கவேண்டிய நூல்.
Be the first to rate this book.