உலகில் மன்னராட்சியால் அவதிப்பட்ட மக்கள், தங்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகப் போராடி, மக்களாட்சி என்னும் புதிய ஆட்சிமுறைக்கு வந்தது மானுட வரலாற்றில் ஒரு சிலிர்ப்பூட்டும் நிகழ்வு.
மக்களாட்சியில் அரசியல் கட்சிகளின் இருப்பு முதன்மையானதாய் இருக்கின்றன. ஆனால் அவற்றால் சமூகத்திலுள்ள அனைவருக்கும் உரிமைகளையும், சமத்துவத்தையும், சமூக நீதியையும் பெற்றுத் தர இயலுகிறதா?
இந்த நூலில் க. பழனித்துரை, மக்களாட்சி செயல்பாட்டில் கட்சி அரசியலிலுள்ள தேக்கநிலையை விளக்குவதுடன் மக்கள் அரசியலுக்கான புதிய கருத்தாடல்களை நம்மிடம் கவனப்படுத்துகிறார்.
இதில் பதினாறு கட்டுரைகள் இடம்பெறுகின்றன. அவை இந்திய அரசியலின் தாழ்நிலை, மங்கிவரும் மக்களாட்சி, நமது ஆளுகையும் நிர்வாகமும், குறைந்தபட்ச மக்களாட்சியில் நாம் என மக்களாட்சியில் உள்ள குறைபாடுகளைத் தொட்டுக் காண்பிக்கின்றன.
பிறகு, மக்களாட்சியை வலுப்படுத்தச் செய்ய வேண்டியவை, மக்கள் அரசியலைக் கட்டமைத்தல், மக்களை அதிகாரப்படுத்துதல், அரசியல் கட்சிக்கு ஊதியம் போன்ற தலைப்புகளில் மக்கள் அரசியலைக் கட்டமைப்பதற்குத் தேவையான அடிப்படைகளை எளிதில் புரிந்துகொள்ளும் வண்ணம் நூலாசிரியர் விளக்குகிறார்.
மக்களாட்சியில் வாழும் நாம் குடிமக்களாகச் செயல்பட்டு, ‘பங்கேற்பு மக்களாட்சி’ மூலம் எவ்வாறு மேம்பாட்டுக்கான அரசாங்கத்தை
உருவாக்க முடியும் என்பதைக் கோடிட்டுக் காட்டியிருப்பது இந்த நூலின் தனிச் சிறப்பு.
மக்களாட்சி செயலிழந்துவிட்டது எனக் குறை கூறுவோரும் அதைச் செப்பனிட முனைப்புக் காட்டுவோரும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்.
Be the first to rate this book.