நவீன இந்திய இலக்கியத்தின் மகத்தான படைப்புகளில் ஒன்று ஓ.வி. விஜயன் எழுதிய ‘கசாக்கின் இதிகாசம்’. மலையாள நவீனத்துவ எழுத்தின் ஆகச் சிறந்த முன் மாதிரியும் நிகரற்ற சாதனையும் இந்த நாவல்தான்.
மலையாள நவீனப் புனைவிலக்கியத்தில் ‘கசாக்கின் இதிகாசம்’ மூன்று நிலைகளில் முன்னோடி இடத்தை வகிக்கிறது.
ஒன்று: அதுவரை பின்பற்றி வந்த நாவல் வடிவத்தை முற்றிலும் மாற்றியது. பன்மைக் குரல்கள் வெளிப்படும் கதையாடலை முன்வைத்தது. தொன்மங்களும் நாட்டார் கதைகளும் உளவியல் துணைப்பிரதிகளும் கொண்ட பரந்ததும் ஆழமானதுமான கதையாடலை அறிமுகம் செய்தது.
இரண்டு: படைப்பு மொழியை உச்சத்துக்குக் கொண்டு சென்றது. ஆரம்பகால நாவலாசிரியரான சி.வி. ராமன்பிள்ளைக்கும் மறுமலர்ச்சிக் கால எழுத்துக் கலைஞரான வைக்கம் முகம்மது பஷீருக்கும் பிறகு இந்த நாவல் வாயிலாக ஓ.வி. விஜயனே படைப்பு மொழியைத் தனித்துவப்படுத்தினார்; புதிய தளங்களுக்குக் கொண்டு சென்றார்.
மூன்று: எதார்த்தத்தின் மீது மாயங்கள் நிறைந்த கதைத்தளத்தை இந்த நாவலே உருவாக்கியது. லத்தீன் அமெரிக்க இலக்கியத்தில் மாய எதார்த்தவாதம் அறிமுகமான அதே கால அளவில் அந்தப் போக்குக்குச் சமாந்தரமான ஒன்று ‘கசாக்கின் இதிகாசம்’ மூலமாகவே வெளிப்பட்டது.
இந்திய மொழி நாவல்களிலேயே ஓர் அற்புதம் என்று சிறப்பிக்கப்படும் ‘கசாக்கின் இதிகாசம்’ முதன்முதலாகத் தமிழில் வெளிவந்திருக்கிறது. நவீன கவிதையிலும் நாவலிலும் தனது வலுவான பங்களிப்பைச் செய்திருக்கும் யூமா வாசுகியின் மொழியாக்கம் நாவலை ஒளிகுன்றாமல் உயிர்ப்புடன் முன்வைக்கிறது.
Be the first to rate this book.