யதார்த்தத்தின் விலங்குக்காட்சி சாலையிலிருந்து புராணிகங்களின் பிரபஞ்சத்திற்கு வாசகன் அழைத்துச் செல்லப்படுகிறான். ஒரு படைப்புயிரை விளங்கிக்கொள்வது பிரபஞ்சத்தைப் புரிந்து கொள்வதற்குச் சமமானது. இவ்வுயிர்கள் பிரதானமாய் கிரேக்க மற்றும் ரோமானியத் தொன்மங்கள் சார்ந்தவை. இதில் உள்ள யாவும் விலங்குகள் மாத்திரமே அல்ல. தவிர கற்பனையானவை மட்டுமேயல்ல. “மாண்ட்ரேக்’ என்ற மாண்ட்ரகோரா என்பது நிஜத்தாவரம். வகைப்பாட்டியல் பிரச்சனைகள் இல்லாமல் இல்லை. தவிர, உயிர்களின் நாமகரண வேர்ச்சொல் அகராதியாகவும் மாறுகிறது இந்நூல். சீன,பௌத்த, இந்துமதப் புராணிக விரிவெல்லைகளில் பயணிக்கிறான் வாசகன்.
ஓவிட்டின் 'உருமாற்றங்கள்' அதிகம் இடம்பெறுகின்றன. இவற்றை மூடநம்பிக்கைகள் என ஊதித்தள்ளிவிட முடியாதபடி ராபர்ட் பர்ட்டன், ஜேம்ஸ் ஃபிரேஸர், பிளாட்டோ, பிளினி, ஷோப்பன் ஹேவர் ஆகிய ஆளுமைகளின் சிந்தனைகள் லாவகமான முறையில் போர்ஹெஸ்ஸூக்கு உதவுகின்றன. காஃப்கா, சி.எஸ்.லூவிஸ், எட்கர் ஆலன் போ போன்ற படைப்பாளிகளின் (மேற்கோள்கள், கவிதை வரிகள்) விபரீதக் கற்பனை உயிர்கள் இந்நூலை விநோத இலக்கியக் கலைக்களஞ்சியமாக மாற்றுகின்றன. போர்ஹெஸ்ஸின் பாணியில் எப்போதும் போல கையடக்கமாக.
- பிரம்மராஜன்
Be the first to rate this book.