எங்கெல்ஸ் எழுதிய மிக முக்கியமான பெரிய நூலான ‘டூரிங்கிற்கு மறுப்பு’ என்பதன் ஒரு பகுதியே இந்நூல். அந்த நூலில் அன்று சோசலிசத்தைக் கொச்சைப்படுத்தி மார்க்சியத்திற்கு மாறான, அறிவியலுக்கு மாறான கருத்துகளை பரப்பி வந்த திருவாளர் டூரிங்கிற்கு மறுப்பாக எங்கெல்ஸ் எழுதியதே அந்த நூல்.
அதில் டூரிங்கின் கருத்துகளை கடுமையாக விமர்சித்து எழுதியிருப்பார். அத்தோடு நில்லாமல் மார்க்ஸும் எங்கெல்ஸும் பிரதிநிதித்துவம் செய்து வந்த அறிவியல் பூர்வமான சோசலிசக் கருத்துகளின் அடிப்படைகளையும் விளக்கியிருப்பார். தத்துவம், பொருளாதாரம், அரசியல் எனும் மார்க்சிய சித்தாந்தத்தின் மூன்று பகுதிகளையுமே தெளிவாய் விளக்கியிருப்பார். அது மார்க்சியம் கற்க முயற்சிக்கும் மாணாக்கர்கள் அனைவருக்குமான பாட நூலாக உலகெங்கும் பயன்படுத்தப்பட்டு வந்தது. அதன் மூன்றாவது பகுதியை மார்க்சின் மருமகனும் எங்கல்ஸின் தோழருமான பால் லஃபார்க்கின் வேண்டுகோளுக்கு இணங்க ஒழுங்கமைத்துத் தனியொரு சிறுநூலாக ஆக்கித் தந்தார். அதனை லஃபார்க், பிரெஞ்சில் மொழிபெயர்த்து 1880 ஆம் ஆண்டு வெளியிட்டார். பின்னர் அது பல்வேறு மொழிகளிலும் வெளியிடப்பட்டு உலகெங்கும் மார்க்சியம் கற்பவர்களுக்கான அடிப்படைப் பாடநூலாக மாறியது.
Be the first to rate this book.