எர்னெஸ்ட் பிளாக் (1885-1977) ஒரு ஜெர்மானிய யூத அறிஞர்.ஒரு ரயில்வே அதிகாரியின் மகனாகப் பிறந்தவர்.பள்ளிப்பருவத்திலேயே மார்க்சியத்தின் மீது ஆர்வம் கொண்டவர்.தத்துவத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். இளமையிலேயே வால்டேர் பெஞ்சமின், ஜியார்ஜ் லுக்காச், பெர்ட்டோல்ட் ப்ரெக்ட், தியோடர் அடோர்னோ போன்ற கனதியான மார்க்சிய நண்பர்களைக் கொண்டிருந்தார்.
1921 ல் எர்னெஸ்ட் பிளாக் 'தாமஸ் முன்த்சர்: புரட்சியின் இறையியலாளர்' என்ற நூலை எழுதினார். தாமஸ் முன்த்சர் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஓர் இறையியலாளர்.ஒன்றுபட்ட கிறித்தவ மதத்திலிருந்து சீர்திருத்தக் கிறித்தவம் என்ற ஒரு பிரிவு தோன்றுவதற்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர்.எளிய கிறித்தவ விவசாயிகளைத் திரட்டி கத்தோலிக்கக் கிறித்தவத்தின் நிலவுடைமை அமைப்புகளுக்கும், நடைமுறைகளுக்கும் எதிராக போராடியவர்
விவசாயிகளை ஆயுதமேந்திப் போராடச் செய்தவர்.இரண்டாம் உலகப்போரின் போது அமெரிக்காவில் தங்கியிருந்த நாட்களில் "நம்பிக்கையின் கோட்பாடு"(The Principle of Hope) என்ற மிகப்பெரிய நூலை எழுதினார். சுமார் 1500 பக்கங்களையும் மூன்று பாகங்களையும் கொண்ட நூல் அது. எர்னெஸ்ட் பிளாக்கின் தத்துவ நிலைப்பாடுகளை முழுவதும் எடுத்துரைக்கும் நூல் என்று இது கருதப்படுகிறது.
இவை தவிர "கற்பனா தேசங்களின் உயிரோட்டம்" "கிறித்துவத்தில் நாத்திகம்" (The Spirit of Utopia, 1918, Atheism in Christianity) போன்ற நூல்களும் இவரால் எழுதப்பட்டுள்ளன.எர்னெஸ்ட் பிளாக்கின் படைப்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்பது கட்டுரைகள் "கார்ல் மார்க்ஸ் ஓர் ஆய்வு நோக்கு" எனும் தலைப்பில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இந்நூலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கட்டுரையும் தனித்தனியாகவும் மொத்தமாகவும் மார்க்சின் செழுமையான தத்துவ நிலைப்பாடுகளை எர்னெஸ்ட் பிளாக்கின் பார்வையில் எடுத்து இயம்புகின்றன.
முதல் கட்டுரை இளம் மார்க்சைப் பற்றியது. நிரம்பித் ததும்பும் மானுடமும் செயல்பாட்டு ஆற்றலும் அந்த இளைஞரின் நெஞ்சை நிறைத்திருக்கும் பண்பு இக்கட்டுரையில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இரண்டாவது கட்டுரை, மார்க்சின் மனிதப் பண்பே அவரது தத்துவம் முன்வைக்கும் நம்பிக்கையின் மூலப்பொருள் எனச் சுட்டிக்காட்டுகிறது. எர்னெஸ்ட் பிளாக்கின் நம்பிக்கை குறித்த கருத்தாக்கம் இக்கட்டுரையில் உயிர் பெற்றுவிடுகிறது.
நிறைவடைந்த உலகம் நோக்கியப் பாய்ச்சல், மார்க்சை ஒரு பரபரப்பான தத்துவவாதியாக உருமாற்றத்தை இக்கட்டுரை சித்தரிக்கிறது. அடுத்த கட்டுரை தன்னந்தனியாகவே ஒரு நூலாகச் சிறப்பிடம் பெரும் தகுதி கொண்ட "ஃபாயர்பாக் பற்றிய ஆய்வுரைகள்" எனும் குறிப்புரைகள் பற்றிய விளக்கவுரை நூல்.
இளம் மார்க்சின் தத்துவார்த்த பயணத்தில் முக்கிய இடம் வகிக்கும் இச்சிறு குறிப்புரைகள்,உண்மையில், ஹெகல், ஃபாயர்பாக், மார்க்ஸ் என்ற மூன்று மாபெரும் அறிஞர்களின் உயிரோட்டமான சந்திப்பை ஆவணப்படுத்தும் பகுதியாகும். ஹெகலின் கருத்து முதல் இயங்கியலும் ஃபாயர்பாக்கின் மானுடவியல் பொருள்முதல்வாதமும் சந்தித்துக் கொண்ட மகத்தான வரலாற்றுத் தருணத்தைச் சித்தரிக்கும் ஆவணம் அது
சின்னஞ்சிறு எழுத்துக்களில் அந்தப் பெரிய மனிதர் எழுதி வைத்த நான்கு பக்கக் குறிப்புரைகளுக்கு சுமார் 70 பக்கங்களில் எர்னெஸ்ட் பிளாக் எழுதித்தந்த மாபாடியம் இந்நூல்.
Be the first to rate this book.