உலகம் கார்ல் மார்க்சின் 2000ஆம் பிறந்த நாளைக் கொண்டாடிக் கொண்டிருந்த பின்னணியில் எழுதப்பட்டது இது. மார்க்ஸ் தன் கால உலகை விளக்கியவர் மட்டுமல்ல. அதை மாற்றி அமைக்க வேண்டிய அவசியங்களையும் முன்வைத்தவர். 2013 இல் இண்டியானா பல்கலைக் கழகம் 35,000 அறிஞர்கள் மத்தியில் மேற்கொண்ட ஒரு ஆய்வில் ஆகப்பெரிய தாக்கத்தை உலகில் விளைவித்த முக்கியபங்களிப்பைச் செய்தவர் என கார்ல் மார்க்ஸ் ஏற்றுக் கொள்ளப்பட்டதை உலகறியும். 2016 இல் ஜெர்மன் அரசியல் பொருளாதார வல்லுனர் வொல்காங் ஸ்ட்ரீஸ் , “எந்தக் காலகட்டத்தைக் காட்டிலும் இன்று கார்ல் மார்க்ஸ் முக்கியத்துவம் ஆகிறார்”எனக் கூறியதோடு முதலாளியமும் ஜனநாயகமும் இணைவது என்பது போன்ற அபத்தமும் பொய்யும் இருக்க முடியாது எனக் கூறியதும் நம் நினைவிற்குரியது. அதை நாம் இன்று அனுபவித்துக் கொண்டுள்ளோம்.
மார்க்சியக் கோட்பாட்டாளர்கள் மட்டுமின்றி ஹைமான் மின்ஸ்கி, ஜான் மெய்னார்ட் கீன்ஸ், நோபல் பரிசு பெற்ற ஜோசப் ஸ்டிக்லிட்ஸ், பவுல் க்ரக்மான் போன்ற துறைசார் அறிஞர்களும் இன்று மார்க்சியப் பொருளாதார அணுகல் முறையின் அவசியம் குறித்துப்பேசும் நிலை ஏற்பட்டுள்ளது. மார்க்ஸ் இருநூறு ஆண்டுகளுக்கு முன் பிறந்தவராக இருக்கலாம். ஆனால் மார்க்சியம் பல்வேறு பரிமாணங்களுடன் தொடந்து வளர்கிறது.
இந்நூலும் மார்க்ஸ் எங்கல்சுடன் நின்றுவிடவில்லை. அவர்களுக்குப் பின்னும் மார்க்சியத்திற்கு வளம் சேர்த்த அல்துஸ்ஸரின் அமைப்பியல் அணுகல்முறை, ஹார்ட், நெக்ரியின் ‘பேரரசும் பெருந்திரளும்’ கோட்பாடு முதலானவையும் இதில் விளக்கப்படுகின்றன. இந்தியா குறித்த கார்ல் மார்க்சின் கருத்துரைகள், மார்க்சின் “மதம் மக்களின் அபின்” எனும் கருத்தாக்கத்தின் சரியான பொருள், மார்க்சின் முன்னோடிகளான ஹெகல் மற்றும் ஃபாயர்பாக் ஆகியோரை மார்க்ஸ் தலைகீழாக்கி அணுகினார் என்பதன் பொருள் என மார்க்சியத்தின் பல கூறுகளையும் இந்நூல் ஆழமாக முன்வைக்கிறது.
Be the first to rate this book.