. சினிமா என்னும் மிகப் பிரம்மாண்டமான கனவு உலகத்தின் இயக்கத்தையும் செயல்பாட்டையும் அநாயாசமாகக் காட்சிப்படுத்தும் நாவல் கரைந்த நிழல்கள். சினிமா உலகத்தில் தானாகவே உருவான சட்ட திட்டங்கள்; அந்தச் சட்ட திட்டங்களுக்குள் சிக்கிக் கொள்ளும் தயாரிப்பாளர்கள், ஸ்டுடியோ முதலாளிகள், டிஸ்ட்ரிபியூட்டர்கள், புரொடக்ஷன் - புரோகிராம் மேனேஜர்கள், இயக்குநர்கள், துணை இயக்குநர்கள், துணை நடிகர்கள் என்று பல்வேறு தரப்பினரின் வாழ்க்கை பெரும்பாலும் சினிமாவைப்போல் வண்ணமயமாக அமைந்துவிடுவதில்லை. திரையில் பயிரிடும் கனவுகளுக்காக வாழ்வின் கனவுகளைச் சிதைத்து உரமாக்கும் வர்க்கம் குறித்த இப்படியொரு யதார்த்தம் குலையாத நாவல் இதற்கு முன்னும் பின்னும் தமிழில் எழுதப்பட்டதில்லை.
கடந்த ஐம்பது ஆண்டுகளாகத் தமிழ்ப் படைப்பியக்கத்தில் மிகத் தீவிரமாக இயங்கிவரும் அசோகமித்திரன், ஜெமினி ஸ்டுடியோவில் மக்கள் தொடர்புத் துறையில் சில காலம் பணியாற்றியவர். அவரது பல படைப்புகள் இந்திய-அயல் மொழிகளில் மொழியாக்கம் பெற்றிருக்கின்றன. இந்த நாவல் ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் மொழிமாற்றம் பெற்றுள்ளது. அசோகமித்திரன், 'அப்பாவின் சிநேகிதர்' என்ற சிறுகதைத் தொகுப்புக்காக 1996-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.
Be the first to rate this book.