இங்கே வாழ்கின்ற ஒவ்வொரு ஆணிற்கும் ஒவ்வொரு பெண்ணிற்கும் பின்னால் ஓர் இரகசிய வாழ்க்கை ஒளிந்திருக்கிறது. எத்தனையோ கசப்புகள், பரிதாபங்கள், வறுமை, பசி, பட்டினி. எத்தனையோ ஏக்கங்கள், நிறைவேறா ஆசைகள். உழைப்பு, உழைப்பு, உழைப்பு.
கொண்டாட்டம். குடி, போதை, காமம். மாதம் ஆயிரம் டாலருக்குள் சம்பாதிப்பவர்களின் தினசரி வாழ்க்கை இதுதானே? இவர்களுடன் சிறிதும் தொடர்பின்றி ஓர் உயரத்தில் ஒரு சமூகம் வாழ்ந்துகொண்டிருக்கிறது. ஆடம்பரம், உற்சாகம், விதிகளற்ற கொண்டாட்டம்! அவர்களுக்கேயான ஓர் இரகசிய இருள் உலகம் இருக்கிறது. அந்த இரகசிய உலகம் தான் என் மூலப்பொருள்.
யெஸ். தட்ஸ் த பாய்ண்ட். மனிதனுக்கு ஆசை என்ற ஒன்று இருக்கிறதே! ஆசை, ஆசை, பேராசை... கிக் இகானமி என்று சொன்னேன் இல்லையா? இன்றைய தேதியில் தனது தினசரித் தேவைகளுக்காக, அதுவும் ஆடம்பரத் தேவைகளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கும் இளம்பெண்களும், ஆண்களும் பெருகி வந்துகொண்டிருக்கிறார்கள். வருமானத்தை மீறி நம் தேவைகள் அடுத்தடுத்த கட்டங்களுக்குச் செல்லும்போது என்ன செய்ய முடியும்? உலகம் போகும் வேகத்தில் நாம் மட்டும் நின்று வாய்பார்த்துக் கொண்டிருக்கலாமா? குறுகிய கால வேளையில் பலமடங்கு பணம் வருகிறதென்றால் சும்மா விட்டு விடுவோமா, என்ன? இவர்களை கச்சாப் பொருளாகக் கொண்டு இருண்ட, மில்லியன்களில் மிதக்கும் ஓர் உலகம் இருக்கிறது. அதில் நான் பிடித்து வைத்திருப்பது ஒரு சிறிய நூலிழைதான்.
Be the first to rate this book.