லஞ்சங்களும் அதிகாரங்களும் தலைவிரித்தாடும் அரசு அலுவலகங்கள் நிறைந்த சாலை அது. அரசு விருந்தினர் “மாளிகை” உள்ள சாலையில் இளநீர் முதல் இறைச்சி வரை கூவிக்கூவி விற்கும் சிறுவியாபாரிகள். அவர்களில் ஒருத்தி தான் அதிகாலையிலயே தனது ஜொலிப்பான மீன் கடையை விரித்து திறமையான பேச்சுத்திறமையோடு வியாபாரம் செய்யும் கண்ணகி. உதாரணமாக ஒருகிலோ மீன் வாங்க வந்த வாத்தியாரை 2அரை கிலோ மீன் வாங்க வைத்தல். அவளிடம் வேலை செய்யும் (மீன் கழுவி அரிந்துபோடும்) நான்கு பெண்கள். நான்கு பெண்கள் கண்ணகியைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்? இரவு சமைப்பதை மட்டுமே உண்டு வாழும் இந்த கண்ணகி யார்? எப்படி இவ்வளவு துணிச்சலான பெண்ணாக இருந்து வருகிறாள்? விரிகிறது ப்ளாஸ்பேக்! சித்தேரிக்குப்பம் ஊர்த்தெருவை விட்டு ஒதுங்கி இருந்த காலனியில் வசித்து வந்தார் காசாம்பு. மாட்டுக்கறி கூறுபோட்டு விற்பவர். காசாம்புக்கு 3 பொண்டாட்டிகள், 17 மகன்கள், ஆசைக்கு ஒரேயொரு பெண். மகள் கசந்தாமணி மீது தனிப்பாசம். தன்னுடன் மாட்டுத் தரகு செய்யும் அஞ்சாம்புலிக்கு கட்டிக்கொடுத்தார். கொளப்பாக்கம் தான் அஞ்சாம்புலியின் சொந்த ஊர். திருமணம் ஆன பிறகு குடிசைபோட்டு வாழத்தொடங்குகிறார்கள். மாடு வாங்கி வளர்க்கிறார்கள். கண்ணகி பிறக்கிறாள். அவள்மீது காசாம்புக்குப் பாசம் அதிகமாகிறது. தாத்தா காசாம்பு போட்டுத்தரும் மஞ்சள்தூள் போட்டு அவித்து தந்த கறியை வழிநெடுக தின்றுகொண்டே செல்லும் கண்ணகி… அவளை அடுத்து பிறக்கும் தம்பி… தன் வீட்டிலிருந்து மறுபக்கம் உள்ள ஆற்றங்கரை பிள்ளையார் கோயில்… அதையடுத்து உள்ள ரைன்கர தெரு… இரவுநேர ரகசியம்… புஷ்பா அக்காவைப் பற்றிய ரகசியம் அறிய முற்படும் கண்ணகி…
Be the first to rate this book.