கணினியைத் தவிர்த்து இன்றைய உலகத்தை கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது. நம் அன்றாட வாழ்க்கையில் அனைத்துச் ெசயல்பாடுகளும் கணினி இன்றி நடைபெறாது என்ற நிலை உருவாகிவிட்டது. உலகத்தை ஒவ்வொருவர் உள்ளங் கையிலும் கொண்டுவந்து கொடுத்துவிட்டது கணினியுகம். மனிதர்களின் அதிதேவையாக மாறிவிட்ட கணினியில் தமிழ் நுழைந்துவிட்டது நம் மொழியின் பெருமை. ஆனால் தமிழில் தட்டச்சு செய்வதால் மட்டும் கணினியின் அனைத்து செயல்களிலும் தமிழ் கலந்துவிட்டது என்றாகிவிடாது. அந்தக் குறையைப் போக்க வந்ததே இந்நூல். கணினியின் அடிப்படை முதற்கொண்டு அனைத்து நிலைகளிலும் தமிழைக் கையாளுவதற்கு வழிசொல்லும் நூல் இது.
நாம் கணினிப் பயன்பாடு சொற்களில் சில சொற்களுக்கு மட்டுமே தமிழ் சொல் அறிந்து வைத்திருக்கிறோம். ஆனால் இந்த நூலில் கணினியின் அனைத்து தொழில்நுட்ப சொற்களுக்கும் தமிழ் சொல் கொடுக்கப்பட்டிருக்கிறது. 'தாய்ப்பலகை - Motherboard, நேரடி அணுகல் நினைவகம் - RAM, வன்தட்டு நிலைவட்டு - Hard Disk' என அனைத்துக்கும் இதில் தமிழில் கொடுக்கப்பட்டுள்ளது சிறப்பம்சம். அனைத்துத் தரப்பினரும் கணினி செயல்பாடுகளை எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் விரிவாகக் கொடுத்துள்ளார் நூலாசிரியர் முனைவர் இல.சுந்தரம். வன்பொருள், மென்பொருள் தொழில்நுட்பம் பற்றி அறிமுக நிலையில் தெரிந்துகொள்ளவும், இணையத்தின் அடிப்படையையும் அதில் தமிழை எவற்றிலெல்லாம் பயன்படுத்தலாம் என்பதையும் விளக்கிக் கூறுகிறது நூல்.
மொத்தத்தில் எல்லாத் தரப்பினருக்கும் குறிப்பாக தமிழ்மொழியியல் ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், கணினியிலும் இணையத்திலும் தமிழைக் கையாள விரும்பும் அனைவருக்கும் ஆகச் சிறந்த நூலாகத் திகழும் என்பதில் மாற்று இல்லை.
Be the first to rate this book.