புலம்பெயர் எழுத்தாளர்கள் 14 பேர்கள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பே இந்நூல். புலம்பெயர்வது பற்றியும் அதன் பல்வேறு பரிமாணங்கள் பற்றியும் மாலன் எழுதிய முன்னுரை குறிப்பிடத்தக்கது.
வாசகனை இந்நூல் கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளுக்கு இட்டுச் சென்று இனிமையான வாசிப்பனுபவத்தை ஏற்படுத்துகிறது. புதிய சூழலில் எழுதும் எழுத்தாளர்களின் கதைக்கரு, சிறுகதை கட்டமைப்பு, சொற்றொடர்கள் புதியனவாக இருக்கின்றன. “இரண்டு வால் கிடைத்த நாய்போல மகிழ்ச்சியில் தத்தளித்தாள்’, “ஆடு, மாடு, கோழிகள் போக கொஞ்சம் மனிதர்களும் வாழ்ந்த ஊர்’ போன்ற சொற்றொடர்கள் தமிழுக்குப் புதியவை.
புலம்பெயர் பூமியில் உள்ள இனவாதம், இனக் கலப்பு, கால நிலை, பெற்றோரைக் கவனிக்க இயலாமை போன்ற பல்வேறு பிரச்னைகளை எழுத்தாளர்கள் தங்களுக்கே உரித்தான வட்டார மொழியில் அழகாக விவரிக்கின்றனர். ஒவ்வொரு கதை முடிவிலும் இனிமையான வாசிப்பு அனுபவம் ஏற்பட்டாலும், இனம் புரியாத வலியும் ஏற்படுகிறது.
வெவ்வேறு வயது, வேறுபட்ட அனுபவங்கள், ரசனைகள் உள்ள புலம்பெயர் எழுத்தாளர்கள், வாழ்க்கையைக் கூர்ந்து கவனித்து, தங்களுடைய செழுமையான மொழிநடையில் தமிழில் வெளிப்படுத்தும்போது ஒரு புள்ளியில் ஒன்றிணைகின்றனர்.
நூலின் பின்பகுதியில் உள்ள சிறுகுறிப்புகளின் மூலம் புலம்பெயர் எழுத்தாளர்கள், அவர்கள் தமிழுக்கு ஆற்றிய சேவைகள் குறித்தும் அறிய முடிகிறது.
Be the first to rate this book.