பண்டிதர் நேரு பெருமான், இந்தியத் திருநாடு சுதந்திரம் அடைந்த நாள் முதல் (15.8.1947), திடீர் சீனத் தாக்குதல் ஆக்கிரமிப்பின் அதிர்ச்சி காரணமான மனவேதனையில் உயிர் நீத்த வரையிலுமாக (27.5.1964), தொடர்ந்து 17 ஆண்டு காலம், முதன் முதல் பாரதப் பிரதமராக முடிசூடா மன்னராகக் கோலோச்சியவர். நம் நாட்டுப் பிரதமராக இத்தனை நெடிய காலம் எவருமே இருந்ததில்லை. சமத்துவம், சோஷலிசம், பொதுவுடமை போன்ற புரட்சிகரமான சித்தாந்தங்களினால் ஈர்க்கப்பட்டு, நாட்டை வெகு வேகமாக முன்னேற்றப் பாதையில் இட்டுச் சென்ற முன்னோடிச் சிற்பி!
நேருஜி எழுதிய "உலக வரலாற்றின் காட்சிகள்,' "கண்டுணர்ந்த இந்தியா,' மற்றும் "ஒரு சுயசரிதை' ஆகிய மூன்று நூல்களும் அவரது சம காலத்திய இந்திய மக்களின் தலைவிதியை நிர்ணயித்ததுடன், அனைத்துலக மக்களையும் எழுச்சியுறச் செய்திருக்கின்றன. ஒருவரது வாழ்க்கை சரிதமானது அவராகவோ அல்லது பிறர் எழுதுவதின் நோக்கம், அவரது பன்முக ஆற்றல்கள், மகோன்னத சாதனைகளை படித்தறிந்து, மக்கள் அவர் தம் அடியொற்றிப் பயணித்து பயனுற வேண்டும் என்பதே ஆகும். சுய விளம்பரத்தை நாட முற்படாத சுயசரிதை நூல் இருமுனைக் கூர் வாளையொத்தது. தன்னையும், தன்னைச் சார்ந்தோருக்கும் புகழாரம் சூட்ட மறுப்பதுடன், எதிரணியினரை எள்ளி நகையாடுதலும், இகழ்ச்சியாக உரைப்பதும் தவிர்க்கப்படுவது மரபு. இத்தகைய இலக்கணங்களை நன்கு அறிந்தவர் நேருஜி என்பதற்கு இந்நூல் கட்டியம் கூறும்.
கடந்த 1940ம் ஆண்டு வரையிலான ஐந்தாண்டு நிகழ்வுகளை நினைவு கூர்ந்து (தமது இல்லத்தில்) எழுதியவற்றையும் இந்நூலில் பிற்சேர்க்கையாகத் தொகுக்கப்பட்டுள்ளது. மேலை நாட்டுப் பொருளாதாரம், அறிவியல், சரித்திரம் மற்றும் தத்துவ மேதைகளின் அரிய கருத்துக்கள் இந்நூலில் நிரம்பி வழிவதை உற்று நோக்கும்போது நேருஜியுடைய விசாலமான, நுட்பமான அறிவுத் திறனும், பன்முக ஆற்றலும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
இந்நூலில் இடம் பெற்றுள்ள சில சுவையான மற்றும் அதிர்ச்சித் தகவல்கள்: * ஜாலியன்வாலாபாக் படுகொலை அரக்கன் ஜெனரல் டயருடன் சேர்ந்து ரயில் பயணம் (பக்:45-46). * இந்து - முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தியவரும், துப்பாக்கி முனைக்குத் தன் நெஞ்சைத் திறந்து காட்டிய மாவீரருமான ஆரிய சமாஜத்தைச் சார்ந்த சுவாமி ஷ்ரத்தானந்தர் ஒரு இன வெறியனால் படுகொலை செய்யப்பட்டது (பக்:166). * அன்றாட அத்தியாவசிய வீட்டுச் செலவுகளை முன்னிட்டு, உயர்ந்த வெள்ளி மற்றும் இதர விலை உயர்ந்த வீட்டுப் பொருட்களை விற்க நேரிட்டபோதும், தன் வசம் இருந்த விலை மதிப்பற்ற புத்தகங்களை விற்க முற்படவில்லை. புதிய புத்தகங்களை வாங்குவதையும் நிறுத்தவில்லை! (பக்:525). அத்தனை அறிவுத் தாகம். சினிமாக்காரர்களைப் போன்று அரசியல்வாதிகளும் (செயற்கை) "விக்'குகள் வைத்துக் கொண்டு நகர்வலம் வரும்போது, தன்னைப்பற்றி அவரே கூறியிருப்பது: நான் மிடுக்காகவும், இளமைத் துடிப்புடன் காணப்பட்டாலும் (44 வயதில்) வழுக்கை விழுந்து, தலைமுடி நரைத்துப் போய் விட்டது! முகத்தில் சுருக்கங்கள் தோன்றி, கண்ணைச் சுற்றிக் கருவளையம் உருவாகி விட்டது (பக்.625) ஏறத்தாழ இரண்டாண்டு காலம் எவரது உதவியும் இன்றி, மூலநூலின் உயிரோட்டம் சிறிதும் சிதறாத வண்ணம் மொழியாக்கம் செய்து வழங்கியுள்ள ஜெயரதனின் கடும் உழைப்பும் அர்ப்பணிப்பும் போற்றுதற்குரியது.
Be the first to rate this book.