கவிஞர் கந்தர்வன் அடிப்படையிலே ஒரு கதைஞர். கவிதையிலும் “நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை, ஞாயிற்றுக்கிழமையும் பெண்களுக்கில்லை” என்று கதையைத்தான் சொன்னார். எதைசொல்லுவது என்பதில் தெளிவும் எப்படிச்சொல்லுவது என்பதில் கூடுதல் நுட்பமும் அழகும் கொண்டவை அவரது கதைகள். எள்ளலும் துள்ளலுமாய் நகரும் ஒரு மொழியில் அவர் கதை சொல்கிறார். பிற படைப்பாளிகள் தொட அஞ்சிய தொழிற்சங்க வாழ்வையும் துலக்கமாக எழுதியவர் அவர். புறவயமாகவே பேசிச்செல்வது போலத் தோற்றம் கொண்டாலும் மனிதர்களின் அக உலகைக் கச்சிதமாகப் பிடித்து நமக்குக் கையளிப்பவை அவரது சிறுகதைகள். சீவன், மங்கலநாதர், காடுவரை.., பூவுக்குக் கீழே, தராசு, மைதானத்து மரங்கள் என அவரது முத்திரைக்கதைகளாகப் பல கதைகள் இருக்கின்றன. மக்கள் எழுத்தாளர் சங்கத்தில் துவங்கி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர்களில் ஒருவராகத் தன் இலக்கியச் செயல்பாடுகளுக்கு வடிவம் கொடுத்தவர். வாசகரின் தோள் மீது கை போட்டுத் தோழமை மிக்க ‘ஒரு குரலில்’ கதை சொல்வது அவரது தனித்த பாணி. எல்லாவிதமான சிந்தனைப்பள்ளிகளைச் சேர்ந்தவர்களும் ஏற்கும் அசலான படைப்பாளி கந்தர்வன்.
- ச. தமிழ்ச்செல்வன்
Be the first to rate this book.