ஒரு கல்லூரிப் பேராசிரியராகத் தன் பணியைத் தொடங்கி, இடதுசாரி இலக்கிய அரசியல் இயக்கங்களில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து இயங்கிவரும் அருணன் தனது வரலாற்றை சுவாரசியமான ஒரு நாவலைப் போல் எழுதியுள்ளார். தனது நினைவில் பசுமையாகப் படர்ந்திருக்கும் பக்கங்களை ஒவ்வொரு சம்பவமாக விவரித்திருக்கும் நூலாசிரியர், நம்மையும் உடன் அழைத்துச் செல்வது போன்ற உணர்வு ஏற்படுகிறது. தனது பெரியம்மா சொர்ணத்தாம்மாள் வீட்டிலிருந்து பள்ளிக்குக் கிளம்பி, வழியில் இருக்கும் பரமேஸ்வரி அம்மன் கோயில் முன்பாக நின்று வணங்கிவிட்டுச் செல்லும் சிறுவயது நினைவுகளிலிருந்து தொடங்குகிறது இந்தத் தன்வரலாறு. இடதுசாரி இலக்கிய அமைப்பான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைத் தொடங்கியது, ‘செம்மலர்’ இதழில் தொடர்ந்து எழுதியது, ‘கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு’, ‘யுகங்களின் தத்துவம்’ போன்ற வரலாற்று ஆய்வு நூல்களை எழுதிக்கொண்டே, இன்னொருபுறம் ‘கடம்பவனம்’ போன்ற நாவல்களை எழுதியது என்று பல அனுபவங்களை விவரித்திருக்கிறார்.
“மார்க்சியத்தை இப்படி இருவிதமாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதை அடித்தளமாகக் கொண்டே எனது எழுத்துக்களும் பேச்சுக்களும் இருந்தன. மார்க்சியம் எப்படி எனது சுவாசமாக இருந்ததோ, அப்படி அது உள்மூச்சு, வெளிமூச்சாகவும் இருந்தது” என்று தான் ஏற்றுக்கொண்ட கொள்கையில் உறுதியுடன் இருக்கும் அருணன்,
‘அவசரநிலை
ஆட்சியில் மாநாடுகளும் கருத்தரங்கும்’,
‘தத்துவ
உலகின் தரிசனம்’,
‘கடவுளின்
கதை முடியுமா?’,
‘நான் இல்லா உலகில் நான்!’ என 30 தலைப்புகளின்கீழ் தன் வாழ்வில் எதிர்கொண்ட சம்பவங்களைப் பதிவுசெய்திருக்கிறார். எழுத்திலும் பேச்சிலும் தனது கொள்கை சார்ந்து உணர்வுப்பூர்வமாகச் செயல்பட்டுவரும் அருணனின் இந்தத் தன்வரலாறு, இடதுசாரி இயக்கங்களில் பணி செய்யும் ஒவ்வொருவரும் தங்கள் பாதையை, பயணத்தைத் திரும்பிப் பார்ப்பது போன்ற உணர்வைத் தருகிறது.
Be the first to rate this book.