ராம கதை எத்தனை முறை கேட்டாலும் அலுப்பதில்லை. எத்தனை தடவை படித்தாலும் சலிப்பதில்லை. வால்மீகியில் ஆரம்பித்து பல்வேறு புலவர்கள் பல்வேறு மொழிகளில் ராம சரிதத்தில் மூழ்கி முத்துக் குளித்திருக்கிறார்கள். கம்பனும் அருணாசலக் கவிராயரும் ராமாயணக் காவியத்தை தேனினும் இனிய தமிழில் தோய்த்துக் கொடுத்திருக்கிறார்கள். ராமனின் கதை ஒருபுறமிருக்க சம்பவங்களை கம்பன் வர்ணித்திருப்பது கொள்ளை அழகு. யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல், வள்ளுவர்போல் இளங்கோவைப்போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை என்று பாரதியார் பரவசப்பட்டு பாடும் அளவுக்கு கம்பனின் கவிநயமிக்க வர்ணனைகள் படிப்போரை கவர்ந்திழுக்கும் தன்மை கொண்டவை. இந்நூலில் பக்கத்துக்குப் பக்கம் கம்பனைக் கொண்டாடுகிறார் கமலா சங்கரன். காலம் கடந்து நிற்கும் அந்தப் படைப்பாளனின் கற்பனைத் திறனையும் கவி உள்ளத்தையும், உவமைகள் பல சொல்லி காட்சிகளை விளக்கும் அவனுடைய உன்னதத் திறமைகளையும் அழகுத் தமிழில் எடுத்துரைக்கிறார்.
Be the first to rate this book.