பட்டிமன்றப் பின்னணியுடன் கூடிய இலக்கியவாதிகள் எப்போதும் வித்தியாசமான பார்வை பார்ப்பார்கள். மற்றவர்களுக்குப் புலப்படாதவை அவர்களுக்கு மட்டும் எப்படியோ தட்டுப்படும். அதிலும் ஆழங்காற்பட்ட புலமையும் இருந்துவிட்டால் கேட்கவா வேண்டும்?
கம்பர் குறித்து முனைவர் தெ.ஞானசுந்தரம் எழுதியிருக்கும் ‘கம்பநாடர் புதிய வெளிச்சம்’ அந்த வரிசையில் உள்ளது. தமிழிலும், சம்ஸ்கிருதத்திலும் புலமை இருப்பதால், முனைவர் தெ.ஞா.வால் கம்பனையும், வான்மீகியையும் ஒப்பு நோக்கிப் புதிய பார்வை பார்க்க முடிகிறது.
இந்த நூல் வெறும் ஒப்புமை நோக்கும் நூலல்ல. கம்பன் படைத்த இராமகாதையின் காலநிரல், வான்மீக காலநிரலியிலிருந்து வேறுபடுகிறது என்கிற அடிப்படையை உணர்த்தி, மேலே நகர்கிறது தெ.ஞா.வின் ஆய்வு.
இதற்காக அவர் மேற்கொண்ட சிரமங்கள் கொஞ்சநஞ்சமல்ல. கடந்த 20 ஆண்டு உழைப்பும், ஆய்வும் இதற்குப் பின்னால் இருக்கிறது. இராமாயண சார சங்கிரகம் என்னும் சம்ஸ்கிருத நூலை மயிலை குப்புசாமி சாஸ்திரி ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து பெற்று, வைணவக் கல்லூரி முன்னாள் வடமொழி பேராசி ரியர் முனைவர் திருவேங்கடத்தான் உத வியோடு படித்தறிந்து, தனது ஆய்வைத் தொடங்கி இருக்கிறார் முனைவர் தெ.ஞா.
"வான்மீகி ராமாயணத்தில் காணப்படும் நிகழ்ச்சிகளின் கால அட்டவணை வேறு. கம்பராமாயணத்தில் அமைந்திருக்கும் நிகழ்ச்சிகளின் கால அட்டவணை வேறு. ஒரே நிகழ்ச்சியை வெவ்வேறு கால எல்லைக்குள் நிகழ்ந்ததாக இருவரும் குறித்துள்ளனர். வான்மீகி முனிவர் பல நாள் நிகழ்ந்ததாகக் காட்டும் நிகழ்ச்சியினைச் சில நாளில் நிகழ்ந்ததாகவும், சில நாள் நடந்ததாகக் காட்டும் நிகழ்ச்சியினைப் பல நாள் நடந்ததாகவும் கம்பநாடர் சித்தரித்துள்ளார்” என்று நிறுவுகிறார் தெ.ஞா.
வான்மீகத்தில் இராவணவதம் அமாவாசையில் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. கம்பராமாயணத்தில் அதுவே பௌர்ணமியில் நிகழ்ந்ததாகக் காட்டப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டுகிறார். அதற்குக் காரணமும் கூறுகிறார்.
கம்ப காதை குறித்த புதிய வெளிச்சம் பாய்ச்சும் முனைவர் தெ.ஞானசுந்தரத்தின் இந்த ஆய்வு நூல், தமிழிலக்கியத்திற்கு அவர் வழங்கியிருக்கும் இன்னொரு கொடை!
Be the first to rate this book.