அண்ணல் அம்பேத்கரை நினைவுகூர்கிறவர்கள் அவரைப் பெரும்பாலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய சட்ட மேதையாகவும், பட்டியலின மக்களின் உரிமைகளுக்காகப் பாடுபட்ட தலைவராகவும் மட்டுமே குறிப்பிடுவதைப் பார்த்திருப்போம். ஆனால் அவருக்குப் பல்வேறு பரிமாணங்கள் உண்டு. அவற்றில் ஒன்றுதான் அறிஞர் அம்பேத்கர் என்பதாகும். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தினமும் பதினெட்டு மணி நேரம் பயின்று 1916இல் எம். ஏ. பட்டம் பெற்ற அம்பேத்கர்; நியூயார்க் நகரில் இரண்டாயிரம் புத்தகங்கள் வாங்கிய அம்பேத்கர்; லண்டன் மியூசியத்தில் காலையில் நுழைந்து இரவு காவல்காரர் வந்து வெளியேறச் சொல்கிற வரைக்கும் படித்த அம்பேத்கர் – அறிஞர் அம்பேத்கரென்ற அந்தப் பரிமாணம் மிகவும் மதிப்பு வாய்ந்தது. அவரது படிப்பு, கல்விக்கூடங்களோடு நிற்கவில்லை. மியூசியத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பிய பின்னரும் கூட அது தொடர்ந்தது. இரவில் பசிக்கு நாலு சுட்ட அப்பளம் ஒரு டீ அவ்வளவுதான், விடியற்காலம் வரைக்கும் ஓய்வின்றித் தொடர்ந்த ஆராய்ச்சிகள். அவற்றின் பலன்களை ஒடுக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி இன்று இந்திய நாடு முழுமையும் அனுபவிக்கிறது.
Be the first to rate this book.