2001இன் பின்னான நிகழ்வுகளின் காலக்களத்தைக் கொண்டிருப்பதாலேயே ‘கனவுச் சிறை’யின் தொடர்ச்சியாக இந் நாவலைக் கொண்டுவிடக் கூடாது. ‘கனவுச் சிறை’ கனவுகளற்ற இலங்கைத் தமிழ் மக்களின் போர்க் கால அவலங்களைச் சொல்லியது. அரசியல் பின்னணியிலிருந்து நாவலின் சகல தளங்களையும், அதில் உலவிய மனிதர்களின் வாழ்க்கையையும் உலுப்பிக்கொண்டிருந்தது. ‘கலிங்கு’ நேரடியாக அரசியலுக்குள் நுழைகிறது. அது கனவு மனிதர்களின், கனவுகளற்ற மனிதர்களினதேபோன்ற அவலங்களைக் கணக்கெடுத்திருக்கிறது.
இலங்கை யுத்தம் சந்தேகத்துக்கிடமின்றி ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. இறுதி யுத்தத்தின்போது மக்கள் அடைந்த அவலங்களைவிட, அதன் பின்னால் அவர்களின் வாழ்வு மீட்சியற்ற விதமாய் சிதைந்து போயிருப்பதையும், மனிதத்தை கலாச்சாரத்தை சகலதையும்தான் சிதைத்துக் கொண்டிருக்கும் போரின் உபவிளைவுகளையும் பாடுபொருளாகக் கொண்டிருக்கிறது நாவல்.
யுத்தம் பற்றிய நினைவுகள் விழுப்புண்களென ஈழத்தமிழ்ச்சமூகத்தை தொந்தரவு செய்தபடியிருக்கிறது. சொற்கள் கொண்டளக்க முடியாத நோவுகொண்டழும் சமூகத்தின்உளவியலை, அவர்களது உளவியலை, அவர்களது மீண்டெழும் முயற்சிகளை, குற்றவுணர்வின் கண்ணீரை, தோற்றும் துவளாத மனிதர்களை, பிழைத்து இருத்தலின் சாகசத்தை 2003-2015 காலப்பகுதியை களனாகக் கொண்டிருக்கும் கலிங்கு பேசுகிறது. அதேவேளை இலங்கைத் தீவினை சூழ்ந்து இறுக்கும் இனத்துவேசத்தின் மூலவேர் எதுவெனவும் அது விசாரணை செய்கிறது.
Be the first to rate this book.