பழந்தமிழ் இலக்கியத்தைக் கவிதையாக அணுகி விளக்கும் நூல்கள் சமீப காலத்தில் வரவில்லை. அக்குறையைப் போக்கும் நூல்களைக் கவிஞர் இசை எழுதி வருகிறார். 'பழைய யானைக் கடை', 'தேனொடு மீன்', 'மாலை மலரும் நோய்' முதலியவற்றின் வரிசையில் இப்போது ‘களிநெல்லிக்கனி.' தமிழ் மரபில் பெண் புலவருக்கு, 'ஔவை' என்னும் பொதுப்பெயர் சூட்டுதல் வழக்கமாக இருந்திருக்கிறது. ஏறத்தாழ எட்டு ஔவையார்கள் எழுதிய பல நூல்களையும் முழுமையாக வாசித்துப் பொருளுணர்ந்து, உரை இல்லாதவற்றையும் முயன்று கற்று இந்நூலை எழுதியிருக்கிறார். நவீன இலக்கிய வாசகர்களுக்கு மரபிலக்கியக் கவிச்சுவையை உணர்த்தும் நோக்கம் கொண்ட நூல் இது. எளிய மொழி, மென்மையான விமர்சனம், சுயபகடி, கவிச்சொல்லைச் சிக்கெனப் பிடித்து விதந்தோதல், மரபிலக்கியம் மீதான மதிப்பு ஆகியவற்றைக் கொண்டு தேன் தடவிய விரலால் இசை எழுதியிருக்கும் இந்நூல் வாசிக்க வாசிக்க நாவூறச் செய்கிறது.
Be the first to rate this book.