"மக்களின் ஜனாதிபதி" "ஏவுகணை நாயகன்" "இளைஞர்களின் வழிகாட்டி" என்று அழைக்கப்பட்டவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம். மாணவர் சமுதாயத்தின் மீது அளப்பரிய அன்பு வைத்திருந்த அவரது இறுதி மூச்சு, மாணவர்கள் மத்தியிலேயே பிரிந்தது.
எளிய குடும்பத்தில் பிறந்து மக்கள் மனதில் உயர்ந்த இடத்தைப் பெற்ற அந்த மாமனிதருக்காக இந்தியாவே அழுதது. "இன்னொரு மகாத்மா"வாக வாழ்ந்த அவரது எளிமை, நேர்மை, தூய்மை போன்ற நெறிகளை எதிர்காலச் சந்ததியினர் பின்பற்றி நடக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவரது வரலாற்றை "கலாம் ஒரு சரித்திரம்" என்ற தலைப்பில் அமுதன் எழுதியுள்ளார்.
ராமேசுவரத்தில் மிகச் சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, இந்திய ஜனாதிபதியாக உயர்ந்து, அந்தப் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் மாணவர்கள் உள்ளத்தில் நம்பிக்கை விதைகளை விதைத்த அப்துல் கலாம் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை இந்த நூலில் எளிமையாகவும், சுவையாகவும் ஆசிரியர் விவரித்துள்ளார். வேலை கிடைக்காத விரக்தியில் இமயமலைக்குச் சென்று சுவாமி சிவானந்தாவைச் சந்தித்தது; சோதனைகளைச் சாதனைகளாக மாற்றிய அவரது உறுதிப்பாடு; திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? விபத்தில் இருந்து இரண்டு முறை தப்பிய சம்பவம்; உயர்ந்த பதவியில் இருந்தபோது மதுரையில் உள்ள கண் ஆஸ்பத்திரியில் ஏழை நோயாளிகளுடன் வரிசையில் நின்ற எளிமை போன்ற எண்ணற்ற ருசிகர தகவல்களை இந்த நூலில் காணலாம். மேலும் கலாமின் அண்ணன் மகள் நசீமா, அண்ணன் மகன் ஜெய்னுலாபுதீன், பேரன் ஷேக் சலீம், பேத்தி நாகூர் ரோஜாவின் நெஞ்சை நெகிழ வைக்கும் பேட்டி; கவிஞர் வைரமுத்து, நடிகர்கள் சிவகுமார், விவேக் ஆகியோர் பகிர்ந்து கொண்ட மனதைத் தொடும் நினைவலைகள் நூலில் இடம் பெற்றுள்ளன. அபூர்வ வண்ணப் படங்கள் நூலுக்கு மேலும் அழகு சேர்க்கின்றன. வாழ்க்கையில் வெற்றி பெறத் துடிக்கும் இளைஞர்களுக்கு இந்த நூல் ஒரு கையேடு; கலங்கரை விளக்கம்.
அமுதன்
மதுரை மண்ணின் மைந்தரான அமுதனின் இயற்பெயர் எம். தனசேகரன். 'தினத்தந்தி' செய்தி ஆசிரியராகப் பணியாற்றி வரும் இவர், பத்திரிகைத் துறையில் 45 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றவர். அப்துல்கலாம் வாழ்க்கை வரலாற்றை, 'கலாம் ஒரு சரித்திரம்' என்ற பெயரிலும், தஞ்சைப் பெரிய கோவில் பற்றி 'ஆயிரம் ஆண்டு அதிசயம்' என்ற பெயரிலும், எகிப்தின் பிரமிப்பூட்டும் பிரமிடுகள் பற்றி 'புதையல் ரகசியம்' என்ற பெயரிலும், இந்தியாவில் பழங்காலத்தில் வாழ்ந்த நமது முன்னோர்கள் விஞ்ஞானம் உள்பட பல துறைகளில் நிறைந்த அறிவு பெற்று இருந்தார்களா என்பது குறித்து, 'பழங்கால இந்தியர்களின் விஞ்ஞானம்' என்ற பெயரிலும், இவர் எழுதிய புத்தகங்கள் பல பதிப்புகளைக் கண்டு மக்களின் அமோக வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
Be the first to rate this book.