நொடிக்கு நொடி பல்வேறு ஆச்சர்யங்களும் பலவித சுவாரஸ்யங்களும் உலகில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன அல்லது நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அப்படிப்பட்ட சுவாரஸ்யமான தகவல்களை இன்னும் சுவாரஸ்யமாக்கிக் காட்டியிருக்கிறது இந்த கலைடாஸ்கோப். பல வினோதமான தகவல்களை, ஓவியம், கட்டடம், புகைப்படக் கலைகளில் புதுமை நிகழ்த்தி ஆச்சர்யங்களை ஏற்படுத்தும் ஆற்றலாளர்களை பல வடிவங்களில் இந்த கலைடாஸ்கோப், வாசகர்களுக்கு எடுத்துக்காட்டுகிறது.
எதைச் சொல்கிறோம் என்பதைவிட எப்படிச் சொல்கிறோம் என்பது முக்கியம். இதற்கு ஏற்ப, பல சுவாரஸ்ய தகவல்களை தன் எழுத்து நேர்த்தியால் சுவைகூட்டி வாரம்தோறும் விகடன் வாசகர்களுக்குப் பகிர்ந்து வருகிறார், சந்தோஷ் நாராயணன். அதில் 45 அத்தியாயங்கள் தொகுக்கப்பட்டு புத்தகமாகியிருக்கிறது. மைக்ரோ சிறுகதை, நானோ ஹிஸ்டரி, பல கலைஞர்களின் வித்தியாசமான கலைப்பொருட்கள், கலைநுட்பங்கள்... என பல பிம்பங்களை இதில் படரவிட்டிருக்கிறார் நூலாசிரியர். நானோ ஹிஸ்டரியில், நாம் பயன்படுத்தும் சேஃப்டி பின், பிரஷ் போன்ற சின்னச் சின்ன பொருட்கள் தோன்றிய வரலாறை சுவையாகச் சொல்லியிருப்பது வெகு ரசனையானது.
மேலும் பனங்காய் வண்டி, உறி போன்ற பல வழக்கொழிந்தவைகளைப் பற்றி இந்தத் தலைமுறைக்குச் சொல்லியிருக்கிறார். பல ரசனைகளின் தொகுப்பு இந்த கலைடாஸ்கோப். நீங்கள் எப்படிப்பட்ட ரசனைக்காரராக இருந்தாலும் உங்கள் ரசனைக்கு நல்ல விருந்து காத்திருக்கிறது... அவற்றை கலைடாஸ்கோப் வழியே காண வாருங்கள்!
Be the first to rate this book.