மரபை மீறக்கூடாது என்று எண்ணினால் புதுமை இலக்கியம் செய்யவே முடியாது; ஆனால் மரபும் பாழாகக்கூடாது. புதுசும் உண்டாகவேண்டும் என்கிற எண்ணம் இன்றைய இலக்கியாசிரியனை ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்பதுபோல மரபில் ஒருகால் அழுத்தமாக நிற்க, தைரியமாக இரண்டாவது காலைப் புதுப் பாதைமேல் வைத்து நடக்கிறான். அதனால் தான் இலக்கியம் உயிருள்ளதாக இருக்கிறது. மரபை மீறுகிற செயலும் காலத்தினால் மரபில் சேர்ந்துவிடுகிறது.
மரபுக்கும், தனிமனித மேதைக்கும் ஒரு இடைவிடாத இழுபறி யுத்தம் இருந்து கொண்டேதான் இருக்கவேண்டும். இந்த யுத்தத்தினால் ஒருவர் தோல்வி மற்றவர் வெற்றி என்று பெறுவதில்லை. மரபுக்கும் வெற்றி; மனிதனுக்கும் வெற்றி என்கிற மாதிரிச் செயல்படுவது என்பது விவரிக்க முடியாத ஒரு இலக்கியப் பாங்கு.
மரபை மீறி மரபுக்குள் போவது - என்பது - கரு, உரு என்பதில் சாத்தியமாக இருப்பது - மொழியிலும் சாத்தியமாகவே இருக்கிறது. ஒவ்வொரு சிறந்த இலக்கியாசிரியனும் பழைய மொழியைத்தான் கையாள்கிறான் என்றாலும் தன் ஒவ்வொரு நூலுக்கும் தக்க புதுமொழியைச் சிருஷ்டித்துக் கொள்கிறான். இது பழைய மரபாகவும் இருக்கிறது - புது மரபுக் கரணைக்கு வழியாகவும் இருக்கிறது என்பது இலக்கியத்தின் தனிச் சிறப்பு.
Be the first to rate this book.