மனிதர்களின் பலவகைப்பட்ட மனக்கோலங்களைப் புரிந்துகொள்வதற்கும் வரைந்து பார்ப்பதற்குமான வழித் திறப்புகளைக் காண்பிக்கும் மிகமிக அரிதான நூல்.
கடல் சார்ந்த நெய்தல் நிலத்தின் சமூகப் பண்பாட்டு வரைவியல் உருவாக்கத்தில் தனித்துவப் பங்களிப்பைச் செய்துகொண்டிருக்கும் ஆய்வறிஞர் வறீதையா கான்ஸ்தந்தின் அவர்களின் கையறு நதி எனும் இந்த வரைவுப் பிரதியோடு கிட்டத்தட்ட ஓராண்டு காலம் செம்மையாக்கப் பயணத்தை மேற்கொண்டிருந்தபோதுதான், அந்தப் பிரதி என்னையே கொஞ்சம் கொஞ்சமாய்ச் செம்மைப்படுத்திக் கொண்டிருந்ததை மெல்ல உணர்ந்தேன்.
நண்பர்களின் நூல் உருவாக்கத்திலும் செம்மையாக்கத்திலும் எம்மால் இயன்ற உதவிகளையும் வழிகாட்டல்களையும் செய்திருந்தாலும், கையறு நதியில் பயணிக்க நான் கொஞ்சம் மெனக்கெடுக்க வேண்டியிருந்தது. போகிற போக்கிலோ அல்லது அவ்வளவு எளிதாகவோ கடந்துபோகிற புனைவு நூலோ, வரலாற்று நூலோ, ஆய்வு நூலோ இதுவல்ல.
இந்த உலகில் வாழும் பலதரப்பட்ட மனிதர்களின் பலவகைப்பட்ட மனக்கோலங்களைப் புரிந்துகொள்வதற்கும் வரைந்து பார்ப்பதற்குமான வழித் திறப்புகளைக் காண்பிக்கும் மிகமிக அரிதான நூல்களுள் கையறு நதியான இந்த நூல் மிகமிக முக்கியத்துவம் வாய்ந்த நூல் ஆகும்.
மனப்பிறழ்வு என்பதாகக் கருதப்பட்டு, குடும்பத்தாராலும் பொது சமூகத்தாலும், கல்வி நிறுவனங்களாலும் ஒதுக்கலுக்கு உள்ளான ஓர் இளம்பெண்ணைச் சூழ்ந்திருக்கும் இவ்வுலகத்தையும், அதனை அப்பெண் அணுகும் விதங்களையும், அப்பெண்ணுக்குத் தகப்பனாய் வாய்த்திருக்கும் ஓர் ஆண் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும், தமது மகளுக்கும், மகளைப் போல பிற மனிதர்களுக்கும் நேர்ந்திருக்கும் உடலியல் சார்ந்தும் உளவியல் சார்ந்துமான இடர்ப்பாடுகள் நிரம்பி வழியும் உலகைக் காணும் விதங்களும் தமிழ்ப் புனைவுகளிலோ அல்லது தன்வரலாற்று நூல்களிலோ விரிவாகவோ ஆழமாகவோ புலப்படுத்தப்படவில்லை.
கையறு நதி எனும் இந்த நூல்தான், புனைவின் வழியாகத் தன்வரலாற்றைப் பேசுவது அல்லது தன்வரலாற்றைப் பேசுவதுபோல புனைவெழுத்தாக்கித் தருவது எனும் எழுத்துப் பாணியில் மகளுக்கும் அப்பாவுக்குமான உணர்வுப்பூர்வமான உறவையும், உயிர்ப்பான நேயத்தையும் உளவியல்பூர்வமான பரிமாணங்களையும் சக மனிதர்களுக்கு எழுத்து வழியாகப் பகிர்ந்திருக்கிறது.
வாசிப்பின் வழியாகப் புதிய புதிய மனிதர்களையும், புதிய புதிய அனுபவங்களையும் இந்நூல் நிறையவே அடையாளம் காட்டியிருக்கின்றது. ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு மன உலகம் இருக்கின்றது. ஒவ்வொருவர் பார்வையிலும் மற்றவர்கள் உலகம் ஏதோ குறைபாடு உடையதாகவே தான் கருதப்படுகின்றது. எல்லா மனிதர்ளும் ஏதோ ஒருவகையில் மனக்குறைபாடு உடையவர்களாகத்தான் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
மனக் குறைபாடு பெரிதல்ல; அப்படியான மனிதர்களோடு சக மனிதர்கள் காட்டும்அன்பும் பரிவும் இரக்கமும்தான் மிக அடிப்படைத் தேவை.
மனிதர்களைப் புரிந்துகொள்ள முனைவதும், புரிந்துகொள்வதில் போதாமைகள் இருப்பதுமான மன உலகைப்பற்றிய உணர்வுத் துளிகள் கையறு நதியில் நிரம்பி வழிந்திருக்கிறது.
பிள்ளைகளைப் பெற்றிருக்கும் தாய்களுக்கும் தகப்பன்களுக்கும், பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்கும் இரண்டாவது பெற்றோர்களான ஆசிரியர்களுக்கும் இந்தப் புத்தகம் மிக முக்கியமான உளவியல் வழிகாட்டி நூலாகவும் இந்நூல் அமைந்திருக்கிறது.
இளம் தலைமுறையினருக்கு உளவியல் ஆற்றுப்படுத்தவும், இளம் தலைமுறையினரின் மனக்கோலங்கள் மட்டுமல்ல, பெற்றோர்களாக - ஆசிரியர்களாக இருக்கும் அத்தனைப் பேரின் மனக்கோலங்களைப் புரிந்துகொள்வதற்கும் இந்நூல் வழிகாட்டியிருக்கிறது. அந்தவகையில், கல்வித்துறையினர் கவனிக்க வேண்டிய நூல்களுள் இந்நூலும் ஒன்றாகும்.
முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின் (1959, பள்ளம்துறை) தூத்தூர் செயின்ட் ஜூட்ஸ் கல்லூரியில் 1982 முதல் மீன்வளமும் விலங்கியலும் கற்பித்து 2018இல் பணிநிறைவு பெற்றவர். 1990களில் தொடங்கி கடல், மீன்வளம், கடல்சார் மக்கள் குறித்து ஆய்விலும் எழுத்திலும் தொடர்ந்து தீவிரமாய் இயங்கி வருகிறார். ‘கடலம்மா பேசுறங் கண்ணு’, ‘நெய்தல் சுவடுகள்’, ‘பழவேற்காடு முதல் நீரோடி வரை’, ‘மூதாய் மரம்’, ‘The Sea Tribes under Seige’ உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட நூல்களையும் ஓர் ஆவணப் படத்தையும் படைத்துள்ளார். நெய்தல் வெளி, கடல்வெளி பதிப்பகங்களின் நிறுவன பதிப்பாளராக ஏராளம் படைப்பாளிகளைத் தமிழுக்கு அறிமுகப் படுத்தியுள்ளார். விகடன் இலக்கிய விருது(2015), அமுதன் அடிகள் இலக்கியப் பரிசு (2016), மம்மா ஆதா விருது (2016) முதலிய பல விருதுகள் பெற்றுள்ளார்.
Be the first to rate this book.