பாரதியின் வசன கவிதையை இன்றைக்கு வாசித்தாலும் சமகாலத்தன்மையுடன் ஈரமாக இருக்கும். அந்த வழியில் கடற்கரய் சூழலையும் மனித இருப்பையும் பொருத்திக் காண்கிற ஆற்றலான மனத்தின் தேர்வு, ஞானத்தின் தேடலாகக் கவிதையின் ஊற்றாக நானைக் கண்டறிந்துள்ளார்.
வானில் பறக்கும் புள்ளெல்லாம் நான்.
வந்து அமரும் காக்கைகூட நான்.
நீரில் மிதக்கும் புழுப்பூச்சி எல்லாம் நான்.
வாத மரத்தின் இலை எல்லாம் நான்.
வான்கோழியின் இறகெல்லாம் நான்.
ஜோதி கதிரின் ஒளிப்பிழம்பு நான்.
மோதி வழியும் பிறைமதியும் நான்.
செங்குரங்கு நான்!
ஓடைகளில் அமர்ந்திருக்கும்
ஒல்லிக் குச்சி ஓணான் நான்!
மனித ஸ்பரிசத்தை விரும்பாத
மரவட்டை நான்!
பசலை இலைகளின் நடுவே
உழுது புரளும் புழுப் பூச்சி நான்!
இந்தப் பிரபஞ்சத்தின் உயிர் மூச்சு நான்!
ஓணான், வான்கோழியின் இறகு எல்லாம் நான் என்ற புரிதலுடன் இருக்கிற கவிஞரின் நான், ஒருநிலையில் ஒளிப்பிழம்பு, பிறைமதி, பிரபஞ்சத்தின் உயிர்மூச்சு என்று சமநிலை அடைகிறது. இயற்கையுடன் தன்னைப் பொருத்திக் காண்கிற கவிஞரின் மெய்யியல் தேடல் அற்புதமான கவிதை வரிகளாகியுள்ளன.
பதினொரு ஆண்டுகளுக்குப் பின்னர் கொரோனா காலத்தில் இருந்த ஊடகப் பணியும் இல்லாத சூழலில் 30, அக்டோபர் 2020 அன்று தற்செயலாக நண்பர் கடற்கரய் மீண்டும் தொடங்கிய கவிதை ஓட்டம் 02, மார்ச் 2021 அன்று நிறைவடைந்துள்ளது. மொத்தம் 54 கவிதைகள். எண்ணிக்கையில் குறைவு என்றாலும் லார்வா பருவத்தில் இருந்து கூட்டைக் கிழித்துக்கொண்டு சிறகடித்த வண்ணத்துப் பூச்சியின் கிளர்ச்சிக்குக் குறைவில்லாத கவிதைகளைக் கடற்கரய் எழுதியுள்ளார்.
சமகால மனிதனைக் கவிதை மொழியின் வழியே திடுக்கிட வைத்து, உள்ளுணர்வைத் தூண்டுகிற எதிர்ப்பியல்பைக் கவிதையில் கட்டமைத்துள்ள கவிஞர் கடற்கரய்யின் சாரம் இன்றைக்குத் தேவையாக உள்ளது. இதுவரை சொற்கள் கட்டமைத்துள்ளவற்றைப் புரட்டுதல், கலைத்தல் மூலம் கட்டுடைத்தல், மரபு வழிப்பட்ட வாசிப்பில் அதிர்ச்சியும் பதற்றமும் ஏற்படுத்தி மீள் கட்டுமானத்தைக் கவிதையாக்கத்தில் கடற்கரய் நேர்த்தியுடன் செய்துள்ளார். வாழ்த்துகள் கடற்கரய்!
ந.முருகேசபாண்டியன்
Be the first to rate this book.