வலக்கைச் சங்கிலியோடும் விரல்களில் மின்னிய மோதிரங்களோடும் சேர்ந்து பையனைத் தூக்கிக் காட்டின. இவை தவிர, அவன் கொண்டு வந்த “ரெங்கோன் மரவை’களும் சீமை ரொட்டிப் பெட்டிகளும் துணிமணிகளும் ஏராளம். அவன் பெயரில் வட்டிபோட்டு வரவாகியிருந்த தொகையும் கடையில் இருந்தது. மூன்று மாத காலம் பெற்றோரையும் உற்றார் உறவினர்களையும் மகிழ்வித்துவிட்டு, மறுபடியும் பர்மா டாப்புக்குப் பயணமானான் வயிரமுத்து. இந்தத் தடவை அடுத்தாள். மூன்று வருடத்துக்குச் சம்பளம் “எச்செலவும் நீக்கிப் பூவராகன் 251, சா.முரு.பழ.முரு.மார்க்காவில் அதற்கு முன் யாரும் 18 வயதில் அடுத்தாளாகக் கொண்டு விற்றதில்லை. பையனுக்குச் சரியான இடத்தில் மச்சம் விழுந்திருக்கிறதென்று கிட்டங்கியில் உள்ளவர்கள் பேசிக்கொண்டனர். வட்டிச் சிட்டை போடுவதிலும், ஐந்தொகை எடுப்பதிலும், புள்ளிகளிடம் இம்மி பிசகாமல் வட்டியைக் கறப்பதிலும் வயிரமுத்து காட்டிய திறமை, மேலாள் செட்டியாரையும் பெரிய அடுத்தாள் “அத்தறுதி’ முத்துக் கருப்பபிள்ளையையும் வெகுவாகக் கவர்ந்துவிட்டது.
(கதையிலிருந்து…)
Be the first to rate this book.