ஆதிப்பொதுவுடைமைச் சமூகம் தாய்வழிச் சமூகமாக இருந்திருக்கிறது. இங்கு பெண்கள் கட்டுப்பாடு அற்றவர்களாகத் தனக்கான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து இனக்குழுச் சமூகத்தில் பெண்கள் படைப்பாளிகளாகவும் கலைஞர்களாகவும் அடையாளப்பட்டிருக்கின்றனர் என்பதற்குச் சங்கப் பாடல்கள் தகுந்த சான்றுகளாக அமைகின்றன. பெரும் கால இடைவெளிக்குப் பின் அடுத்தடுத்து வந்துகொண்டிருக்கும் பெண் படைப்பாளிகள் வரிசையில் தன் இரண்டாவது கவிதை தொகுப்போடு வந்துள்ளார் கவிஞர் சுஜாதா செல்வராஜ். கவிதைகளை வாசிப்பதும் எழுதுவதும் கவிதைகளோடு இருப்பதும் கவிதையாக வாழ்வதும் கவிஞர் சுஜாதா அவர்களுக்குப் பிடிபட்டிருக்கிறது என்பதை அவரது இந்தக் கவிதைத் தொகுப்பின் வழி அறிந்து கொள்கிறேன். காதல், பசலை, காமம், கூடல், மனம், மௌனம், அன்பு, வேட்கை, யாசகம், பெண்ணின் இருப்பு, வானம், அந்தி, குழந்தமை, கனவு, கடல், இரவு, பயணம், நினைவு, நிலவு, தத்துவம், அழகியல், மரபு மீறல், உறவு, நம்பிக்கை, வாழ்வின் மீதான எதார்த்தம் உள்ளிட்டவைகள் கவிதைகளில் பேசுபொருள்களாக இருக்கின்றன. இவரது கூர்மையான பார்வையும் மொழியும் காத்திரமாக இருக்கிறது.
முனைவர் பி.பாலசுப்பிரமணியன்
Be the first to rate this book.