அத்தனை சீக்கிரத்தில் எவரும் நுழைந்திட முடியாத என் இருண்மைக்குள் உன்னை அனுமதிக்கிறேன். மெதுவாக வா… இந்த இருள் உனக்குப் பழகிவிடும். இடறும் இடங்களில் என் தோள்களைப் பற்றிப்பிடித்துக்கொள். அடர் கானகங்களில் ஒளி நுழையா வண்ணம் படர்ந்திருக்கும் இலைகளின் கரும்பச்சை வண்ணத்தையொத்தது ஆன்மாவின் நிர்வாணம்.
அவசரமில்லை, பொறுமையாக உன் ஆன்மாவின் ஆடையை அவிழ்த்துக் கொள். உனக்கு எப்போது தோன்றுகிறதோ அப்போது என்னை அனுமதி. உன் காயங்களை ஒவ்வொன்றாகக் காட்டு. காற்றினைப் போல உன்னை வருடிச்செல்ல விடு.
நான் மிகமெல்லிய முத்தங்களில் என்னுள் பூக்களை முகிழச்செய்பவள், சிறு அணைப்பினில் பற்றியெரியும் துன்பத் தீயை ஒற்றி எடுப்பவள். சின்னதாய் மனம் வாடுகையில் கண்ணீர் ஊற்றுகளை உருவாக்குபவள். என் வனத்தில் அநேகம் ஊற்றுகளுண்டு, நந்தவனங்களுண்டு. கொஞ்சம் முத்தமிட்டுக் கொஞ்சம் கூடியிரு, பின் மெதுவாகச் சிறு ஊற்றென தோன்றிப் பாயும் நதியென உன் பாதை தேடிப் போய் விடு!
சித்தார்த்தனே, இவ்வண்ணம் இவ்வனம் கடந்து உன் போதிமரத்தினை அடைந்திடு.
- நிரோஜினி ரொபர்ட்
Be the first to rate this book.