வாழ்வு, பல வண்ணங்களைத் தீட்டிச் செல்கிறது. சில வண்ணங்கள் நமக்குப் பிடிக்கின்றன; சில வண்ணங்கள் பிடிப்பதில்லை. சில வண்ணங்களைக் கொண்டாடுகிறோம்; சில வண்ணங்களை மறுதலிக்கிறோம். ஆனால், நம் விருப்பு, வெறுப்புகளைப் பற்றிக் கவலை கொள்ளாமல், வாழ்வின் தூரிகை, கலைத் தாகம் கொண்ட ஓர் ஓவியரைப் போல, ஓயாமல் வண்ணங்களைத் தீட்டிக் கொண்டேயுள்ளது.
இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள், வாழ்வின் பல்வேறு வண்ணங்களைப் படம் பிடிக்கின்றன. அவற்றுள், அன்பு உண்டு, ஆற்றாமையும் உண்டு; காதல் உண்டு, காமமும் உண்டு; தனிமை உண்டு, தத்துவமும் உண்டு; இளமை உண்டு, முதுமையும் உண்டு; பிறப்பு உண்டு, இறப்பும் உண்டு. இயற்கையைப் பாடும் கவிதைகள் கூட, வாழ்வைப் பேசு பொருளாகக் கொண்டவையே. சுருக்கமாக, இந்தத் தொகுப்பு முழுக்க வாழ்வே நிரம்பி வழிகிறது!
வெளியே மழை கொட்டும் போது, ஜன்னலருகே நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்து, எப்படி ஒரு கோப்பைத் தேநீரை இரு கைகளிலும் ஏந்தி, சிறிது சிறிதாக ரசித்துப் பருகுவீர்களோ, அப்படி இந்தக் கவிதைகளையும், ஒவ்வொன்றாக ரசித்து வாசியுங்கள். தேநீர் தீர்ந்து போகலாம். ஆனால், இந்தக் கவிதைகள் தீராது.
Be the first to rate this book.