காலங்களைக் கடந்த கீதங்களாக இன்றைக்கும் வாழ்பவர் கண்ணதாசன். இயல்பான, வாழ்வியல் செறிவுமிக்க வரிகளைப் பாடல்களாக்கி, சமூகத்தின் கடைக்கோடி காதுகள் வரை ரீங்கரித்தவர் அவர். ‘காதல் என்றால் கண்ணதாசன்தான்’ என்கிற அளவுக்கு ரசனையிலும், அதீத அன்பிலும் பொங்கிப் பிறந்தவை அவருடைய பாடல்கள். காதலை மட்டும் அல்லாது, கற்க வேண்டிய நெறிகளையும், வாழ்வியல் அனுபவக் கூறுகளையும் அவர் வார்த்தைகளில் வழியவிட்ட விதம் அசாத்தியமானது. பண்ணை வீட்டு உயரிய வாழ்க்கையைப் பழகிய கண்ணதாசன், ஒரு சராசரி மனிதனின் அன்றாடத் துயரங்களையும் அனுபவிக்கத் தவறவில்லை. அதனால்தான், அனைத்துத் தரப்பு மக்களுக்குமான கீதங்களை அவருடைய பேனாவால் பாட முடிந்தது. சொர்க்கத்தை சுட்டிக்காட்டிய கண்ணதாசன், சோகத்தின் படு பாதாளத்தையும் தன் பாடல்களில் இறக்கி வைத்தார். அத்தனை மனிதர்களும் தங்கள் வாழ்வோடு பொருத்திப் பார்க்கிற வரிகளாக - அனுபவ வலிகளாக அவருடைய வரிகள் இருந்தன. உணர்வான பாடல்கள் உருவான விதம், எம்.எஸ்.விஸ்வ நாதனுடன் அவர் பணியாற்றிய சம்பவங்கள், குடும்ப நிகழ்வுகள், நண்பர்கள் உடனான நெகிழ்வுகள் என கண்ணதாசனை இன்னும் அழகாகவும் அற்புதமாகவும் நம் கண் முன்னால் நிறுத்துகிறார் நூலாசிரியர் த.இராமலிங்கம். வாழ்வியல், காதல், இலக்கியம் என மூன்று பகுதிகளாகப் பிரித்து கண்ணதாசனின் நிகழ்வுகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டு உள்ளன. ‘நான் நிரந்தரமானவன் அழிவதில்லை...’ என காலக்கணிதமாக கண்ணதாசன் எழுதிய வரிகளை நிஜமாக்கி இருக்கிறது இந்த நூல்!
Be the first to rate this book.