மனித உணர்வுகளில் அதிமுக்கியமானது ‘காதல்’. அன்பின் அடிப்படையில் முகிழும் காதல், யுவன்-யுவதிகள் இடையே மட்டும் அல்லாது வயது வித்தியாசம் இன்றி எந்த வயதினரையும் பற்றும்; எவரையும் சுற்றும். இரு மனங்களும், நான்கு கண்களும் கருத்துகளைப் பறிமாறிக்கொள்ளும் ஒப்பந்தம்தான் ‘காதல்’. இதிகாச காலம் தொட்டு இன்றைய காலம் வரை, காதல் என்கிற வார்த்தைதான் உலகத்தை ஆள்கிறது. இனம், நிறம், குணம் என எல்லாவிதமான பாகுபாடுகளையும் சரிசெய்யும் சக்தியாக காதல் மட்டுமே இருக்கிறது. லைலா-மஜ்னூன், கேதரீன் ஹெப்பர்ன்-ஸ்பென்ஸர் ட்ரேஸி, கிளார்க் கேபிள்-கரோல் லோம்பார்ட் போன்றோரின் காதல் நிகழ்வுகளை நம் கண்ணெதிரே நடப்பது போன்ற ஓட்டத்தோடும், காதல் ரசம் சொட்டும் வார்த்தைகளோடும் அழகியலாக விளக்கி உள்ளார் நூலாசிரியர் மதன். காதலில் கரைய விரும்புகிறவர்கள், தன் காதலை எப்படி வெளிப்படுத்துவது, தன் ஜோடியிடம் எவ்வாறு நடந்துகொள்வது, தம்பதிகளிடையே ஏற்படும் பிரச்னைகளுக்கான அடிப்படைக் காரணம் என்ன, அதைத் தீர்க்கும் வழிமுறைகள் என்ன என்பதுபோன்ற பல்வேறு தகவல்கள் இந்த நூல் முழுவதும் விரவி இருக்கின்றன. மேலும், இந்த நூலில் இடம்பெற்றுள்ள, ‘காதலை வெளிப்படுத்துவதற்கான சுயபரிசோதனை வழிமுறைகள்’, காதலர்களுக்கான வழிகாட்டியாக விளங்கும். மதன் படைத்த இந்தக் காதல் குளத்தில் நீங்கள் மகிழ்வோடு கண் எறிந்து பார்க்கலாம். நிச்சயம் உங்கள் நெஞ்சத்தை வசீகரிக்கும்.
Be the first to rate this book.