மனிதனின் வாழ்க்கைமுறை நாளுக்கு நாள் அபாரமான மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் கண்டுவருகிறது. இதை நமக்கு உணர்த்தும் காரணிகள் பலவாக இருந்தாலும், நம் பயன்பாட்டில் இன்றியமையாத இடத்தைப் பிடிக்கும் தொழில்நுட்பங்களுக்கும் அதில் பெரும் பங்கு உண்டு. அந்த வரிசையில் இன்றைய காலகட்டத்தில் மனிதனின் அன்றாட வாழ்க்கையோடு ஒன்றிப்போனதும், அவசியமானதுமான கம்ப்யூட்டர் குறிப்பிடத்தக்கது. காபி தூள் கடை முதல் கார்ப்பரேட் ஆபிஸ் வரை கம்ப்யூட்டரின் பயன்பாடு அவசியமான ஒன்றாகிவிட்டது. கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவதே பெருமையாக இருந்த காலம் போய்... சர்வசாதாரணமாக எல்லோர் வீடுகளிலும் கம்ப்யூட்டர் வைத்திருக்கும் சூழ்நிலை தற்போது உள்ளது. நம் பயன்பாட்டில் முக்கிய இடம் பிடித்துவிட்ட கம்ப்யூட்டரை பொழுதுபோக்குக்காகவோ, வெறும் தகவல் தொடர்புக்காகவோ மட்டும் வாங்கி வைத்துக் கொள்ளாமல் வருமானத்துக்கும் பயன்படுத்துவதே புத்திசாலித்தனமான செயல். ‘அது சரி, கம்ப்யூட்டர் என்னிடமும்தான் உள்ளது. அதை வருமானத்துக்கு எப்படி பயன்படுத்துவது?’ என்று யோசிப்பவர்களுக்கு அற்புதமான வழிகாட்டுதலை சில தொழில் பிரிவுகளாகப் பிரித்து, இந்த நூலில் விளக்கியிருக்கிறார் நூலாசிரியர் காம்கேர் கே.புவனேஸ்வரி. கம்ப்யூட்டரைத் தொழில்ரீதியாக எப்படிக் கையாள்வது, எந்தெந்த தொழில்களுக்கு என்னென்ன விஷயங்கள் அடிப்படையாகத் தெரிந்திருக்க வேண்டும், தொழில் வாய்ப்புகள் என்னென்ன என்பன போன்ற தகவல்களைத் தெளிவாகவும் எளிமையாகவும் விளக்கியுள்ளார். உதாரணமாக, அக்கவுன்ட்ஸ், மல்டிமீடியா, மெடிக்கல் டிரான்ஸ்க்ரிப்ஷன், வெப் டிசைனிங், டெக்ஸ்டைல் டிசைனிங் போன்ற தொழில்கள் தெரிந்தவர்கள் கம்ப்யூட்டர் உதவியோடு எப்படி சுயமாகவும் தங்கள் தொழிலில் சிறக்கமுடியும் என்பதை இந்த நூலில் கொடுத்திருக்கிறார். மேலும் ஆன்லைன் பிஸினஸ்களில் ஈடுபடும்போது இருக்கவேண்டிய எச்சரிக்கைகளையும் எடுத்துக் கூறியிருப்பது சிறப்பு. பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரண்டாம் வகுப்பு மட்டுமே படித்தவர்களாக இருந்தாலும் கூட, அவர்களும்கூட கம்ப்யூட்டரைக் கையாளமுடியும். கம்ப்யூட்டர் பற்றிய அடிப்படை அறிவு மட்டும் பெற்றிருந்தாலே அதைப் பயன்படுத்தி வருமானத்துக்கு வழிதேட முடியும் என்ற நம்பிக்கையூட்டும் தகவல்களைப் புரியவைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. கம்ப்யூட்டரும் அதன் பயன்பாடுகளும், அதனைச் சார்ந்த தொழில்நுட்ப விவரங்களும், கம்ப்யூட்டர் சார்ந்த கல்வியும் இன்று ஒவ்வொருவருக்கும் எந்த அளவு அத்தியாவசியமானது என்பதை இந்த நூல் உணர்த்துகிறது. நம் வாழ்க்கையோடு கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் மறைமுகமாகவும் நேரடியாகவும் எப்படியெல்லாம் ஒன்றிப்போய் உள்ளது என்பதை உணர்த்துகிறது. அலுவலகங்களின் பயன்பாடுகள், தகவல் தொடர்பு, பொழுதுபோக்கு மட்டுமல்லாமல் சுயதொழில் வருமானத்துக்கும் கைகொடுப்பது கம்ப்யூட்டர் என்பது மறுக்கமுடியாத உண்மை. கம்ப்யூட்டர் சார்ந்த ஒவ்வொரு தொழிலுக்கும் ஏற்ற சாஃப்ட்வேர்கள், ஹார்டுவேர்கள் பற்றியும், கம்ப்யூட்டர் தொழில்களுக்காக நாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் எனப் பலவிதமான வழிகாட்டுதல்கள் நிறைந்த இந்த நூல் எல்லோர் வாழ்வுக்கும் வருவாய்க்கும் வழிகாட்டும் பயனுள்ள சிறந்த கையேடு.
Be the first to rate this book.