2006ஆம் ஆண்டு முதல் இணையத்தில் எழுதி வருகிறேன். அதற்குச் சில ஆண்டுகள் முன் கைப்பிரதியாக எழுதி வைத்திருந்த கதைகளையும் மொழிபெயர்ப்புகளையும் தட்டச்சு செய்து என் வலைப்பக்கத்தில் பதிந்தேன். அடுத்தடுத்து, வலசை, வார்த்தை, சொல்வனம், பண்புடன், திண்ணை, பதாகை, தமிழினி, அரூ போன்ற இதழ்களில் சிறியதும் பெரியதுமாகபுனைவுகள் எழுதினேன். இத்தனை வருடங்களுக்குப் பிறகுஅச்சில் வெளியாகும் முதல் புத்தகம் இது.
வளர்ப்பு நாயைப் போல நாளின் கடமைகள் விலகியதும் வாசல் வந்து வரவேற்று, சோம்பித் திரிந்த நேரத்தில் என் மீது கால்போட்டு, வாலாட்டி, உந்தித்தள்ளி வலுக்கட்டாயமாக எழுத வைத்த கதைகளும் கதைமாந்தர்களும் இத்தொகுப்பில் உள்ளனர். தொகுப்பில் சேர்ந்த கதைகள் அப்படி எழுதக் கோரியவையே என்பது என்னில் பெரும் ஆசுவாசத்தைத் தந்துள்ளது.
எழுத ஆரம்பித்த காலம் தொட்டு என் கதைகளை முதலில் வாசிப்பவராகவும் விமர்சனங்களை முன்வைப்பவருமாகவும் நண்பர் நட்பாஸ் எனும் பாஸ்கர் இருந்துள்ளார். அவரது பல வழிகாட்டல்கள் புனைவுகளை செறிவுபடுத்தி வந்துள்ளது.ஆம்னிபஸ், சொல்வனம், பதாகை எனத் தொடர்ந்து பயணம் செய்து வருகிறோம்.
என் எல்லா கதைகளையும் உடனுக்குடன் படித்துக் கருத்து சொல்லும் சிவா கிருஷ்ணமூர்த்தி, சுனில் கிருஷ்ணன், பிரபு ராம், தன்ராஜ் மணி போன்ற நண்பர்களுக்கு என் பிரத்யேக அன்பு.
எழுதுவதற்கு முன்பே அண்ணன் சிவாவுடன் விவாதித்து விரிவுபடுத்தி எழுதிய கதைகள் பல உண்டு. அவரது இதமான தட்டிக்கொடுத்தல்களும் பக்குவமான சுட்டிக்காட்டல்களும் மனதுக்கு எப்போதும் நெருக்கமாவை.ஒவ்வொரு நாளும் தமிழ் மற்றும் அயல் இலக்கியம் குறித்து நாங்கள் விவாதித்து வருவது என் ரசனையை சீர்தூக்கிப் பார்க்க உதவியுள்ளது.வலைதளத்தில் எழுதத் தொடங்கிய காலம் முல் நண்பர் பிரபு ராம் மிக நுண்ணிய தளங்களில் என் கதைகள் மீதான கருத்துகளை முன்வைத்துள்ளார்.அவருடைய சீரிய இலக்கிய ரசனையும் ஆழமான வாசிப்பும் எப்போதும் என்னைஆச்சர்யப்படுத்தும்.
ஆம்னிபஸ் வலைதளம் தொடங்கிய காலத்திலிருந்து சுனில் கிருஷ்ணனின் வேகம் என்னை பிரமிக்க வைத்துள்ளது.என் மீதும் ஒட்டிக்கொண்டுள்ளது. கதைகளைப் பற்றி உரையாடுவதிலும்அலசுவதிலும் ஆர்வம் உள்ள நண்பர் தன்ராஜ் மணியின் முதல் தொகுப்பும்கூடிய விரைவில் வெளியாகி பெரும் கவனத்தைப் பெறும்.
ஜெயமோகன், யுவன் சந்திரசேகர், பாவண்ணன், பி.ஏ.கிருஷ்ணன்,நாகரத்தினம் கிருஷ்ணா என எழுத்தாளர்களும் தொடர்ந்து என் புனைவுகள்மற்றும் அபுனைவுகள் பற்றிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர். அவர்களுக்குஎன் நன்றிகள்.
அஜய், ஸ்ரீதர் நாராயணன், நம்பி கிருஷ்ணன், நடராஜன், சுரேஷ் மற்றும்பிற பதாகை நண்பர்கள், சொல்வனம் ரவி சங்கர், வ.ஸ்ரீனிவாசன், சேதுபதி அருணாசலம், சிறில் அலெக்ஸ், அனோஜன் பாலகிருஷ்ணன், மயிலாடுதுறை பிரபு, சொல்வனம் நண்பர்கள் பாலாஜி, அனுகிரஹா, லண்டன் தமிழ் இலக்கிய குழும நண்பர்கள் எனப் பலரும் என்னை எப்போதும் ஊக்கப்படுத்தி வந்துள்ளனர்.
மனைவி சித்ரலேகா, குழந்தைகள் ஆதிரா மற்றும் அக்ஷரா என்னை முழுமைப்படுத்தும் உலகம். குறிப்பாக, என் நூல் வெளிவரும் நாள் பற்றித்தொடர்ந்து கேட்டு வந்தவள் ஆதிரா. அவர்களுக்கு என் முத்தங்கள். தமிழ் வாசிப்பில் என் துணையாகவும் என் அப்பாவுக்குப் பிறகு உண்டானஇடைவெளியை நிறைப்பவனாக இருக்கும் என் அண்ணன் முரளிதரனைஇச்சமயத்தில் இறுக அணைத்துக்கொள்கிறேன்.
புத்தகத்தை மிகச் சிறப்பாகச் செம்மைப்படுத்தி வடிவமைத்துக் கொடுத்த அழிசி ஸ்ரீநிவாசனுக்கும், பதிப்பிக்கும் தமிழினி வசந்தகுமாருக்கும் அன்பு,
நன்றிகள்.
அன்புடன்
ரா. கிரிதரன்
Be the first to rate this book.