“ஊரோட ஊரா வாழ்ந்துட்டா, ரெங்கநாயகி இல்லேன்னா இந்த ஊர் செத்துடும், இந்த ஊர் இல்லனா ரெங்கநாயகி செத்துடுவா.” அவன் வெறுமையாய், சின்னதாய் சிரித்தான். அது சிரிப்பும் கூட இல்லை, சிரிப்பு மறைத்த அழுகை, “ஊர் இல்லைன்னா அம்மா செத்துடுவாங்கன்னு சொல்லுங்க.. அம்மா இல்லைன்னா ஊர் சாகாது, ஈ எறும்பு கூட சாகாது,"
*
"நல்லா தூங்கறப்போ வாயில கூப்பிட்டா எழ முடியாதும்மா முதுகுல எட்டி உதைக்கனும் இல்லன்னா ஜில் தண்ணியை மூஞ்சில ஊத்தனும், எங்க ஓனர் அப்படிதான் எழுப்புவார்ம்மா..." மனதில் ஒளித்து வைக்கும் பக்குவம் வராத அப்பு சாதாரணமாக கூறினான்.
*
"நான் குர்ரான் படிச்சதில்ல ரவி, சாமிய நம்பறேன், அல்லாவ நம்பறேன் சாராயம் வித்தா கண்டிப்பா தண்ணி கலப்பேன். டீ, காபில கலக்க மாட்டேன்" என்பார்.
*
பெங்களூர் சிட்டியிலிருந்து இருபது கிலோ மீட்டர் தள்ளி இருந்த அந்தக் கம்பனிக்குள் நுழையும் போதே கேம்பஸ் இன்டர்வியு என்பது செயின் பறிப்புக் கொள்ளையை விட மோசமானது என்று புரிந்துக் கொண்டேன். என் சர்டிபிகேட்டை முகமூடியோ, ஹெல்மெட்டோ இல்லாமல், கழுத்தில் டை கட்டி வந்து, ரெண்டே ரெண்டு வார்த்தை ஆங்கிலம் பேசி பறிச்சிட்டாங்க.
Be the first to rate this book.