முருகன் என்கிற பெயருக்கு அழகு என்று பொருள். இப்பெயரை ஒருமுறை உச்சரிக்கும்போது முப்பெரும்தேவர்களும் அருள் வழங்க வருகிறார்கள் என்று ஆன்றோர் பெருமக்கள் கூறுவர். ‘மு’ என்னும் எழுத்து முகுந்தனையும் (திருமால்), ‘ரு’ என்னும் எழுத்து ருத்ரனையும் (சிவபெருமான்), ‘க’ என்னும் எழுத்து கமலனான நான்முகனையும் (பிரம்மதேவன்) குறிப்பிடுகின்றன.
‘முருக’ என்கிற பெயரை உச்சரிக்கும்போதும் முருகப் பெருமானை அழைக்கும்போதும், மும்மூர்த்திகளின் அருளும் நமக்கு கிடைக்கிறது. ஆறு முகங்களைக் கொண்டதால் முருகப் பெருமானை ‘ஆறுமுகன் என்று அழைத்தாலும், அவர் ஆறு பகைவர்களை அழிக்கிறார் என்பதை அறிகிறோம். ஒருவர் மனதில் இருக்கும் ஆறு பகைவர்களான ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், ஆச்சர்யம் ஆகியவற்றை அழித்து, அவரை நல்வழியில் கொண்டு செல்ல முருக வழிபாடு துணை நிற்கிறது. இல்லம், கோயில், தமிழகம், இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் முருகன் வழிபாடு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
முருகப் பெருமானின் வலப்புறம் உள்ள ஆறு கரங்களில் அபயகரம், சேவற்கொடி, வச்சிரம், அங்குசம், அம்பு, வேல் ஆகிய ஆறு ஆயுதங்களும், இடது புறம் உள்ள ஆறு கரங்களில் வரமளிக்கும் கரம், தாமரை, மணி, மழு, தண்டாயுதம், வில் ஆகிய ஆறு ஆயுதங்களும் உள்ளன. முருகப் பெருமானின் சேவற்கொடிக்கு ‘குக்குடம்’ என்று ஓர் பெயர் உண்டு, இந்த சேவலே வைகறைப் பொழுதில் ஓங்கார மந்திரத்தை ஒளி வடிவில் உணர்த்துகிறது.
Be the first to rate this book.